2813. | அன்ன காலை, அழல் மிகு தென்றலும் முன்னின் மும் மடி ஆய், முலை வெந்து உக, இன்னவா செய்வது என்று அறியாது, இளம் பொன்னின் வார் தளிரில் புரண்டாள்அரோ. |
அன்ன காலை அழல் மிகு தென்றலும் - அச்சமயத்தில் வெப்பம் மிக்க தென்றல் காற்றும்; முன்னின் மும்மடி ஆய் - முன்புவருத்தியதைவிட மூன்று மடங்கு மிகுதியாய் (வருத்த); முலை வெந்து உக - கொங்கைகள் வெப்பமுற்று அனல் சொரிய; இன்னவா செய்வது என்று அறியாது - இன்ன வகையாகச் செய்வேன் என்று தெரியாமல்; இளம் பொன்னின் வார் தளிரில் புரண்டாள் - இளமையும் பொன் போன்ற நிறமும் கொண்ட தளிர்களின் மீது விழுந்து புரண்டாள்; அரோ - அசை. இளம் பொன்னின் வார் தளிரில் புரண்டாள் என்பது காமத் தீயில் வருந்தும் பெண்களைத் தளிர்ப்படுக்கையில் கிடத்தி ஆற்றுவிக்கும் நிலையைக் காட்டும். தோழிகள் தளிரைப் பரப்பித் தலைவி துயரைத் தணிப்பர் இதனை மிதிலைக் காட்சிப் படலத்தில் சீதை பட்ட துன்பத்தைக் கூறும்போது 'கரிந்தன பல்லவங்களே' (529) என்பர். மேலும் 'தாயரின் பரி சேடியர் தாதுரு வீ, அரித்தளிர், மெல்லணை மேனியில் காய் எரிக் கரியக் கரிய கொணர்ந்து ஆயிரத்தின் இரட்டி அடுக்கினர்' (560) என்பர் இங்குத் தாதியரோ பிறரோ உதவாமல் தனக்குத் தானே சூர்ப்பணகை தளிர்களைப் பரப்பி அவற்றில் புரண்டாள் என்பதாம். இவளுக்குத் தென்றலும் பகையாயிற்று. 82 |