2814. | வீரன் மேனி வெளிப்பட, வெய் யவள், கார் கொள் மேனியைக் கண்டனளாம் என, சோரும்; வெள்கும்; துணுக் கெனும்; அவ் உருப் பேருங்கால், வெம் பிணி யிடைப் பேருமால். |
வீரன் மேனி வெளிப்பட - (அப்போது) இராமனின் திருமேனியின் உரு வெளித்தோற்றம் எழ; வெய்யவள் கார்கொள் மேனியைக் கண்டனளாம் என - கொடிய அரக்கியாம் சூர்ப்பணகை கருமேகம் போன்ற அவனது திருமேனியைக் கண்டவளே போல; சோரும் - சோர்வு அடைவாள்; வெள்கும் - வெட்கமடைவாள்; துணுக் கெனும் - திடுக்கிட்டு நடுங்குவாள்; அவ்வுருப் பேருங்கால் வெம் பிணியிடைப் பேரும் - அந்த வடிவம் மறையும் போது கொடிய காம நோயில் மீண்டும் அகப்படுவாள்; ஆல் - அசை. வெம்மை - கொடுமை. விருப்பம் எனக் கொண்டால் இராமன் மீது விருப்பம் கொண்டவள் என ஆம். காமத்தால் உருவெளித் தோற்றம் காண்பது காப்பியப் படைப்பின் இயல்பாம். மிதிலைக் காட்சிப் படலத்தில் இராமன் சீதையின் உருவெளிப் பாட்டைக் கண்டு வருந்தியதைப் பல பாடல்கள் விளக்கும் (619.630). பின்னர்ச் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் சீதையின் உருவெளிப்பாடு தோன்றியதால் இராவணன் வருந்திக் கூறிய கூற்றையும் விரித்துரைக்கும் (3208-3210). கார் கொள் என்பதில் கொள் என்பது உவம வாசகம். 83 |