2815. ஆகக் கொங்கையின், ஐயன்
     என்று அஞ்சன
மேகத்தைத் தழுவும்;
     அவை வெந்தன
போகக் கண்டு புலம்பும்,
     அப் புன்மையாள்
மோகத்துக்கு ஒர் முடிவும்
     உண்டாம் கொலோ?

    அஞ்சன மேகத்தை ஆகக் கொங்கையின் ஐயன் என்று தழுவும்-
மை போன்று கரிய மேகத்தை இராமன் என எண்ணித் தன் மார்பிலுள்ள
முலைகளில் பிடித்து அணைப்பாள்; அவை வெந்தன போகக் கண்டு
புலம்பும் அப்புன்மையாள் -
அம்மேகங்கள் (காமத் தீப்பட்ட உடலின்
வெப்பத்தால்) வெந்து அழிந்தமை கண்டு வாய்விட்டுப் புலம்புவாள் அந்த
இழிந்த பண்பு கொண்ட சூர்ப்பணகை; மோகத்துக்கு ஒர் முடிவும்
உண்டாம் கொலோ -
காமத்திற்கு ஒரு முடிவு உண்டாகுமோ? (ஆகாது).

     கரிய மேகங்களைக் கண்டு இராமன் எனச் சூர்ப்பணகை எண்ணிக்
கைகூப்பிய நிலையை முன்னர்க் கண்ட பாடல் கூறியது (2811). இப்போது
அந்நிலையின் வளர்ச்சிப்படியாக மேகத்தைத் தழுவி நின்றாள். அதுவே
காமத் தீயின் வெப்பத்தால் வெந்தொழிந்தது, மேகம் என்பது அழுதலும்
பிதற்றலுமாகிய மன்மதாவத்தையாம். முன் மூன்றடிகளில் கூறிய சிறப்புப்
பொருளை ஈற்றடியிலுள்ள பொதுப் பொருள் விளக்கி நிற்கும். இதனை
வேற்றுப் பொருள் வைப்பணி என்பர் ஒர்-ஓர் என்பதன் குறுக்கல்
விகாரம்.                                                   84