சூர்ப்பணகை மோக வெறியால் புலம்பல்

2816.'ஊழி வெங் கனல் உற்றனள்
     ஒத்தும், அவ்
ஏழை ஆவி இறந்திலள்'
     என் பரால்-
'ஆழி யானை அடைந் தனள்,
     பின்னையும்
வாழலாம் எனும்
     ஆசை மருந்தினே.'

    ஊழி வெங்கனல் உற்றனள் ஒத்தும் - காமத்தால் பிரளய காலத்தில்
பரவும் கொடிய தீயில் பட்டவள் போலத் துன்புற்றாள் எனினும்; ஆழி
யானை அடைந்தனள் பின்னையும் வாழலாம் எனும் ஆசை
மருந்தினே -
கடல் வண்ணனாம் இராமனைச் சேர்ந்து இன்னும்
வாழக்கூடும் என்ற அவா ஆகிய மருந்தினால்; அவ் ஏழை ஆவி
இறந்திலள் என்பர் -
அந்த அறிவில்லாத சூர்ப்பணகை உயிர் விடவில்லை
எனக் கூறுவர்; ஆல் - அசை.

     காமத்தீயாம் நோயிலிருந்தும் அவள் சாகாதிருப்பதற்குக் காரணம்
சூர்ப்பணகை இராமனை அடைந்து வாழலாம் என்ற ஆசை
கொண்டமையாகும். இராமன் மீது கொண்ட ஆசையே மருந்தாகி அவளை
வாழச் செய்தது. 'பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன் நோய்க்குத்
தானே மருந்து' (குறள் 1102) என்ற கருத்து இங்கு ஒப்பு நோக்குதற்குரியது.
உருக்காட்டுப் படலத்தில் சீதையின் துயர் மொழியில் 'பேணும் உணர்வே!
உயிரே! பெருநாள் நாண் இன்று உழல்வீர்; தனி நாயகனைக் காணும்
துணையும் கழிவீர் அலிர்' (5235) என்று வரும் பாங்கும் ஒப்பிடற்குரியது.

     செய்கையின் ஆழியானை என்ற பாடம் கொண்டு சிவந்த கைகளையுடைய இராமனை எனவும் கொள்வர்.                     85