2817.'வஞ்சனைக் கொடு மாயை‘
     வளர்க்கும் என்
நெஞ்சு புக்கு, எனது ஆவத்தை
     நீக்கு' எனும்;
'அஞ்சனக் கிரியே!
     அருளாய்' எனும்;
நஞ்சு நக்கினர் போல
     நடுங் குவாள்.

    நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் - விடத்தை நாவினால்
நக்கியவர் போன்று சூர்ப்பணகை உடல் நடுக்கமுற்று; (இராமனை முன்
நிற்பது போல் எண்ணி அழைத்து) அஞ்சனக்கிரியே அருளாய் எனும் -
மைம்மலை போன்றவனே! எனக்கு அருள் புரிவாயாக என்பாள்;
வஞ்சனைக் கொடு மாயை வளர்க்கும் என் நெஞ்சு புக்கு எனது
ஆவத்தை நீக்கு எனும் -
வஞ்சனையையும் கொடிய மாயையும்
வளர்க்கின்ற என் மனத்துள் நீ புகுந்து எனக்குண்டான ஆபத்தைப்
போக்குவாய் என்பாள்.

     மதி மயக்கம் கொண்ட சூர்ப்பணகை தன் முன் இராமன்
இருப்பதாகவே எண்ணினாள். தன் மனத்துன்பம் தீராததால் கொடிய
நஞ்சுண்டவர் உடலும் உயிரும் துடிப்பது போல நடுங்கினாள். தான்
செய்யும் வஞ்சனையையும் மாயையையும் தன்னிடமிருந்து நீக்க வேண்டும்
என இராமனிடம் தன் குறையை வெளிப்படுத்தினாள் என்பர். இராமனின்
திருமேனியும் கறுப்பு. நஞ்சின் நிறமும் கறுப்பு எனக் கொண்டு நஞ்சு
நக்கினர் போல நடுங்கினள் என்பர். வேண்டத் தகாத ஆசையைச்
சூர்ப்பணகை கொண்டதை நஞ்சு நக்குதற்கு உவமை ஆக்கினர்.
'அஞ்சனக்கிரியே' என விளிப்பதற்கேற்ப முன்னர்த் தைலமாட்டு படலத்தில்
'அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும்' (1890) என்பர்.                86