2818. | 'காவியோ, கயலோ, எனும் கண் இணைத் தேவியோ திருமங் கையின் செவ் வியாள்; பாவியேனையும் பார்க்கும் கொலோ?' எனும்- ஆவி ஓயினும், ஆசையின் ஓய்வு இலாள். |
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள் - தன் உயிர் ஓய்ந்து அழிந்தாலும் தான் இராமன் மேல் கொண்ட ஆசையிலிருந்து நீங்காத சூர்ப்பணகை; காவியோ கயலோ எனும் கண்ணிணைத் தேவியோ - நீலமலரோ கயல்மீனோ என்று கூறத்தக்க இருகண்களையுடைய அவன் மனைவியோ; திருமங்கையின் செவ்வியாள் - இலக்குமியை விட அழகுள்ளவளாக இருக்கிறாள்; (அதனால்) பாவியேனையும் பார்க்கும் கொலோ எனும் - பாவியாகிய என்னையும் அவன் கண்ணெடுத்துப் பார்ப்பானோ என்று கூறி வருந்துவாள். ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள் என்ற கருத்திற்கு ஒப்பாக நளவெண்பாவில் 'பூவின் வாய் வாளிபுகுந்த வழியே யென் ஆவியார் போனாலும் மவ்வழியே - பாவியேன் ஆசை போகா தென்றழிந்தாள்' (நள : 1.96) என்ற பாடல் உள்ளது. கண்ணுக்குக் காவியும் கயலும் உவமையாக வருவது காவிய மரபாகும். 'திருமங்கையில்' என ஒப்புப் பொருளாகக் கொள்வதும் உண்டு. பாவியும் - இழிவு சிறப்பும்மை கொலோ - கொல் ஐயப்பொருளிலும் ஓ எதிர் மறைப் பொருளிலும் வந்தன. 87 |