2819.'மாண்ட கற்புடையாள்
     மலர் மா மகள்,
ஈண்டு இருக்கும் நல்லாள்
     மகள்' என்னுமால்;
வேண்டகிற்பின் அனல்
     வர மெய்யிடைத்
தீண்டகிற்பது அன்றோ,
     தெறும் காமமே?'

    ஈண்டு இருக்கும் நல்லாள் மகள் - (இவன்) அருகில் உள்ள
அழகிய பெண்; மாண்ட கற்புடையாள் மலர்மா மகள் என்னும் -
பெருமை மிக்க கற்புடையவளான செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்
திருமகளே என்று கூறுவாள்; வேண்டகிற்பின் தெறும் காமமே - (ஒரு
தலைவனை) ஆசைப்பட்டால் (அப்போதே) அழிப்பதாம் ஆசை நோயே;
அனல் வர மெய்யிடைத் தீண்டகிற்பது அன்றோ - நெருப்பைப் போல
வெப்பமுண்டாக உடம்பில் சேர்வதல்லவா எனக் கூறுவாள். ஆல் - அசை.

     திருமால் போன்ற இவன் அருகில் இருப்பவள் திருமகளே எனச்
சூர்ப்பணகை நினைக்கிறாள். இதனால் அவன் தன்னை விரும்பான் என்பது
குறிப்பு. 'மாண்ட கற்புடையாள்' என்பதற்கு அழிந்த கற்புடையவள் எனப்
பொருள் கூறிச் சூர்ப்பணகையை இத் தொடர் குறிக்கும் என்பர். இதற்குச்
சான்றாக முன்னர் வந்த தேயும் 'கற்பினாள்' (2757) என்ற தொடரைக்
காட்டுவர். இராமனை உரு வெளித் தோற்றமாகச் சூர்ப்பணகை மீண்டும்
மீண்டும் காண்பதால் 'ஈண்டு' என்றாள். பன்னிரண்டடிகள் காமத்தியல்பு
கூறுகின்றன. இதனால் சூர்ப்பணகையின் காம நோய் நன்கு புலப்படும்.

     இது பொதுப் பொருளால் சிறப்புப் பொருளை விளக்குவதால் பிறிது
மொழிதல் எனும் அணியாம்.

     (இப்பாடல் சிறந்த சுவடிகளிலும் சிறந்த அச்சுப்படிகளிலும் இல்லை.
எனவே இதனை மிகைப் பாடலாகக் கொள்வர்.)                    88