2820. | ஆன்ற காதல் அஃது உற எய்துழி, மூன்று உலோகமும் மூடும் அரக்கர் ஆம் ஏன்ற கார் இருள் நீக்க இராகவன் தோன்றினான் என, வெய்யவன் தோன்றினான். |
ஆன்ற காதல் அஃது உற எய்துழி - மிகுந்த காதலாம் அத் துன்பத்தைச் சூர்ப்பணகை பெரிதும் அடைந்து வருந்தும் போது; மூன்று உலோகமும் மூடும் அரக்கர் ஆம் - வானுலகு, பூமி, பாதலம் எனும் மூன்று உலகங்களையும் மூடி விடக் கூடிய வலிமை படைத்த இராக்கதர் ஆகிய; ஏன்ற கார் இருள் நீக்க - எதிர்ப்படும் கரிய இருட்டைப் போக்க; இராகவன் தோன்றினான் என வெய்யவன் தோன்றினான் - இராமன் அவதரித்தது போலச் சூரியன் உதயம் ஆனான். சூர்ப்பணகை பட்ட காம வேதனையை 2803 முதல் இது வரையுள்ள 18 பாடல்கள் விரித்துரைக்கின்றன. இருளுக்கு அரக்கர்களும் அதைப் போக்கும் கதிரவனுக்கு இராமனும் உவமை ஆம். சூர்ப்பணகை பட்ட துன்பத்தை அரக்க நிலைக்கு ஏற்பக் கூறியது எண்ணத்தக்கது. மிதிலைக் காட்சிப் படலத்தில் சீதை கொண்ட காதல் நோயை (519-539) ஒப்பிட்டுக் காணின் இவ்வேறுபாடு நன்கு புலனாகும். இப்பாடலுடன் சூர்ப்பணகைப் படலம் முடிந்ததாகவும் அடுத்த பாடல் முதல் மூக்கரி படலம் தொடங்குவதாகவும் சில சுவடிகளில் உள்ளன. 89 |