சீதையைத் தூக்கிச் செல்லச் சூர்ப்பணகை முயலுதல்

2821.விடியல் காண்டலின், ஈண்டு, தன்
     உயிர் கண்ட வெய்யாள்,
'படி இலாள் மருங்கு உள்ள அளவு,
     எனை அவன் பாரான்;
கடிதின் ஓடினென் எடுத்து, ஒல்லைக்
     கரந்து, அவள் காதல்
வடிவினானுடன் வாழ்வதே
     மதி' என மதியா,

    விடியல் காண்டலின் ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் -
பொழுது விடிந்ததைப் பார்த்ததால் உடலோடு கூடிய தன் உயிரைப் பார்த்த
கொடியவளாம் சூர்ப்பணகை; படி இலாள் மருங்கு உள்ள அளவு -
ஒப்பில்லாதவளாம் அப்பெண் (சீதை) பக்கத்தில் உள்ள வரை; எனை
அவன் பாரான் -
என்னை அவன் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டான்;
(ஆதலால் நான்) கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லைக் கரந்து -
விரைவாக ஓடிச் சென்று எடுத்துக் கொண்டு போய் விரைவில் மறைத்த
பின்; அவள் காதல் வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா -
அவளது ஆசை வடிவமான அவனுடன் கூடி வாழ்வதே சிறந்தது என
எண்ணி,

     படி - ஒப்பு, இராமன் மேனி பற்றிச் சீதை வினவ அனுமன் 'படி
எடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று படிவம்' (5265) 'எனக் கூறிய
விடையில் இப்பொருள்பட இச்சொல் வருதல் காண்க. சீதையை எடுத்து
வேறோர் இடத்தில் மறைத்து வைப்பது அவள் கருத்து. பழைய உரையில்
சூர்ப்பணகை 'தன் வயிற்றிடை அவளை ஒளித்துத் தின்று' எனப் பொருள்
காணப்பெறும். இராமனுடன் சூர்ப்பணகை சீதையின் வடிவெடுத்து
அவனுடன் வாழ நினைத்தாள். ஏனெனில் அவள் விரும்பும் வடிவெடுக்கும்
ஆற்றலுடையவள் ஆம். இரவில் சூர்ப்பணகையின் காம நோய், பகல்
தொடங்கியதும் குறைந்த நிலையை முதலடி காட்டும். இரவு, கலவிக்கு உரிய
காலம். அதனால் காம நோய் மிகும். பகலில் பல்வேறு பொருளை நாட
இடமேற்பட வழியுண்டு. அதலால் காம நோய் குறையும். எனவே 'தன்
உயிர் கண்ட வெய்யாள்' எனப்பட்டாள் சூர்ப்பணகை.                90