2822. | வந்து, நோக்கினள்; வள்ளல் போய், ஒரு மணித் தடத்தில் சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள்; தம்பி, இந்து நோக்கிய நுதலியைக் காத்து, அயல், இருண்ட, கந்தம் நோக்கிய, சோலையில் இருந்தது காணாள். |
வந்து நோக்கினள் - இராமன் முதலியோர் தங்கியிருந்த இடத்தில் வந்து பார்த்தாள்; (அப்போது) வள்ளல் போய் ஒரு மணித்தடத்தில் சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள் - இராமன் அவ்விடத்தை விட்டுச் சென்று ஒரு அழகிய நீர்த் துறையில் சந்தியாவந்தனம் முதலிய செயல்களில் ஈடுபட்டமையைப் பார்த்தாள்; தம்பி இந்து நோக்கிய நுதலியைக் காத்து- தம்பியாம் இலக்குவன் பிறைமதியைப் போன்ற நெற்றியையுடைய சீதையைப் பாதுகாத்துக் கொண்டு; அயல் கந்தம் நோக்கிய இருண்ட சோலையில் இருந்தது காணாள் - அருகே நறுமணம் வீசிய இருள் நிறைந்த சோலையில் இருந்ததைச் சூர்ப்பணகை பார்க்கவில்லை. பின்னர், 'நின்று அந்த நதியகத்து. நிறை தவத்தின் குறை முடித்து' (2845) என இராமன் வந்த நிலையைக் கூறுவதால் கோதாவரி நதித் துறையிலே சந்தியாவந்தனம் செய்தான் எனலாம். 'இந்து நோக்கிய நுதலி' என்பதில் நோக்கிய என்பது உவம வாசகம் இனிச் சந்திரனும் கண்டு வியக்கும் அழகிய நெற்றியுடையவள் எனலும் ஆம். இந்து - எட்டாம் பிறை. இராமனை வள்ளல் என்றது அவன் உயிர்களுக்கு வரையறையின்றி அருள் புரியும் கடமை பூண்டமையைப் புலப்படுத்தும். இலக்குவனைச் சூர்ப்பணகை காணாததற்குக் காரணம் சோலை இருண்டிருந்தமையாகும். அவன் தனியிடத்து ஒதுங்கியிருந்தமையும் ஆகும். சந்தி என்பது அக்காலத்தே நிகழும் கடன்களைக் குறிக்கும் கால ஆகுபெயராம். 91 |