2823.'தனி இருந்தனள்; சமைந்தது என்
     சிந்தனை; தாழ்வுற்று
இனி இருந்தது எனக்கு எண்ணுவது இல்'
     என, எண்ணா,
துனி இருந்த வல் மனத்தினள்
     தோகையைத் தொடர்ந்தாள்;
கனி இரும் பொழில், காத்து,
     அயல் இருந்தவன் கண்டான்.

    தனி இருந்தனள் - (நான் வந்த இப்பொழுதில்) இவள் தனியளாக
உள்ளாள்; என் சிந்தனை சமைந்தது - என் எண்ணம் பலித்தது;
தாழ்வுற்று இனி இருந்தது எனக்கு எண்ணுவது இல் என எண்ணா -
காலம் தாமதித்து இனிமேல் இங்கு இருந்து எனக்கு வேறு செயல் பற்றி
நினைக்க வேண்டியது இல்லை என நினைத்து; துனி இருந்த வல்
மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள் -
வெறுப்புடைய கொடிய
வன்னெஞ்சினளாம் சூர்ப்பணகை மயில் போன்ற சீதையைப் பிடித்தற்குப்
பின் தொடர்ந்தாள்; கனி இரும் பொழில் காத்து அயல் இருந்தவன்
கண்டான் -
பழங்கள் நிறைந்த பெரிய சோலையில் சீதையைக் காத்து
அருகிலிருந்த இலக்குவன் (அதனைப்) பார்த்தான்.

     சமைந்தது - தன் காரியம் கை கூடியது என உறுதியாக எண்ணிய
துணிவைக் காட்டும். சீதையிடத்துச் சூர்ப்பணகை வெறுப்புற்றதற்குக்
காரணம் அவளருகில் இருப்பதால் இராமன் தன்னை விரும்பான் என
எண்ணியதாகும். இதனை முன்னர்ப் 'படியிலாள் மருங்குள்ள அளவு எனை
அவன் பாரான்' (2821) என்ற எண்ணத்தில் வெளிப்பட்டது. 'எனக்கு
எண்ணுவது இல்' எனத் தன் மீது கொண்ட மிகுந்த நம்பிக்கை இலக்குவன்
இருந்ததை அவள் பாராத பிழையால் எல்லாச் செயலும் நிறைவேறாது
குலைந்து போனது. எனவே அவள் பிழை நிலை புலப்படும்.

     சமைந்தது - எதிர்காலத்தில் அமைய வேண்டியது இறந்த காலத்தில்
வந்ததால் கால வழுவமைதி. தோகை - உவமையாகுபெயர்.           92