2825. | 'ஊக்கித் தாங்கி, விண் படர்வென் என்று உருத்து எழுவாளை, நூக்கி, நொய்தினில், 'வெய்து இழையேல்' என நுவலா, மூக்கும், காதும், வெம் முரண் முலைக் கண்களும், முறையால போக்கி, போக்கிய சினத்தொடும், புரி குழல் விட்டான். |
ஊக்கித் தாங்கி விண்படர் வென் என்று உருத்து எழுவாளை - முயன்று இவனையும் எடுத்துக் கொண்டு வான்வழிச் செல்வேன் என்று கோபித்து மேற்கிளம்பிய சூர்ப்பணகையை; நொய்தினில் நூக்கி - (இலக்குவன்) எளிதில் கீழே தள்ளி; வெய்து இழையேல் என நுவலா - கொடுந்தொழிலைச் செய்யாதே என்று கூறி; மூக்கும் காதும்வெம் முரண் முலைக்கண்களும் முறையால் போக்கி - மூக்கையும் காதுகளையும் கொடிய வலிய முலைக் காம்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாய் அறுத்தெறிந்து; போக்கிய சினத்தொடும் புரிகுழல் விட்டான் - சினத்தை விட்டு முறுக்கிப் பிடித்த அவள் கூந்தலையும் விட்டான். மூக்கும் காதும் அறுத்தது அவளுக்கு அவலட்சணம் உண்டாக்குதற்காம். முலையை அறுத்தது அவள் பெண்மை நலம் சிதைத்தற்காம். 'காதிரண்டும் இல்லாதான் ஏக்கழுத்தம் செய்தலும் (சிறுபஞ்சமூலம் 5) 'முலையிரண்டுமில்லாதாள் பெண்மை காமுற்றற்று (குறள். 402) என்பவற்றுடன் ஒப்பிட்டுணரலாம். இனி மேல் வாயும் மேலுதடும் அறுத்த செய்தி பின்னர்க் காணப் பெறும் (2869). வான்மீகம் மூக்கும் காதும் மட்டுமே கொய்தான் எனக் கூறும். மேலும் முதல் நூலில் இராமன் சூர்ப்பணகையை இலக்குவனை அணுகுமாறு சொல்லவும் அவ்வாறு அவள் சென்று தன்னை ஏற்குமாறு கூற அவன் இராமனையே மணக்குமாறு கேட்கக் கூறினான். மீண்டும் இராமனை அவள் வேண்ட அவன் மறுக்கவே ஆத்திரத்தில் சீதை மீது பாய்ந்து உண்ண முயன்ற போது இராமனின் கட்டளைப்படி இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கையும் காதையும் போக்கினான். (ஆரணிய காண்டம் 18ஆம் சருக்கம்). 94 |