சூர்ப்பணகையின் ஓலம்

2826. அக் கணத்து அவள் வாய் திறந்து
     அரற்றிய அமலை,
திக்கு அனைத்தினும் சென்றது;
     தேவர்தம் செவியும்
புக்கது; உற்றது புகல்வது என்?
     மூக்கு எனும் புழையூடு
உக்க சோரியின் ஈரம் உற்று,
     உருகியது உலகம்.

     அக்கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை - அந்த
நேரத்தில் சூர்ப்பணகை வாயைத் திறந்து கதறிய ஓசை; திக்கு
அனைத்தினும் சென்றது -
எல்லாத் திசைகளிலும் சென்று பரவியது;
தேவர் தம் செவியும் புக்கது - வானுலகில் உள்ள தேவர்களுடைய
காதுகளிலும் சென்று நுழைந்தது; உற்றது புகல்வது என் - இனி அங்கு
நடந்ததைச் சொல்ல வேண்டியது என்ன?; மூக்கு எனும் புழையூடு உக்க
சோரியின் -
அவள் மூக்கு என்ற துளைகளின் வழியே வழிந்த
இரத்தத்தினால்; உலகம் ஈரம் உற்று உருகியது - உலகம் முழுவதும் ஈரம்
படிந்து கரைந்தது.

     சூர்ப்பணகை தன் உறுப்பிழந்து இட்ட பேரொலி எட்டுத் திசைகளை
எட்டியது மட்டுமன்று வானுலகையும் அடைந்தது என்றதால் பாதலத்தையும்
எட்டியது என்பது குறிப்பு. அறுபட்ட மூக்கின் துளைகளிலிருந்து வழிந்த
இரத்தத்தின் பெருக்காலும் வெப்பத்தாலும் உலகமே கரைந்தது. இது உயர்வு
நவிற்சி அணி.                                                95