2827.கொலை துமித்து உயர் கொடுங் கதிர்
     வாளின், அக் கொடியாள்
முலை துமித்து, உயர் மூக்கினை
     நீக்கிய மூத்தம்,
மலை துமித்தென, இராவணன்
     மணியுடை மகுடத்
தலை துமித்தற்கு நாள் கொண்டது,
     ஒத்தது, ஓர் தன்மை.

    கொலை துமித்து - கொல்லுவதை நீக்கி; உயர் கொடுங் கதிர்
வாளின் அக்கொடியாள் முலை துமித்து -
சிறந்த ஒளிமிக்க சுற்றுவாளால்
அந்தக் கொடிய சூர்ப்பணகையின் முலைகளை அறுத்து; உயர் மூக்கினை
நீக்கிய மூத்தம் -
உயர்ந்து விளங்கிய மூக்கையும் அறுத்த நல்ல நேரம்;
மலை துமித்தென - மலையின் சிகரங்களை வெட்டியது போல;
இராவணன் மணியுடை மகுடத் தலை துமித்தற்கு - இராவணனுடைய
இரத்தினம் பதித்த கிரீடங்களை அணிந்த பத்துத் தலைகளை அறுத்தற்கு;
நாள் கொண்டது ஒத்தது ஓர் தன்மை - தொடக்கச் சடங்கு செய்ய
முகூர்த்தம் செய்ததை ஒத்ததாயிருந்தது.

     துமித்தல் - விலக்கல், கதிர் என்பது, கூர்மையுமாம். 'கொலை துமித்து'
என்பதனை வாளுக்கு அடையாக்கிக், கொன்று பகையை வெட்டி மேம்பட்ட
(வாள்) என்பதும் ஆம். மூத்தம் - முகூர்த்தம் இராவணனைக் கொல்ல
நேரம் குறித்தல் இக்காண்டத்திலேயே கரன் வதைப் படலத்தில் மூத்தம்
ஒன்றில் முடிந்தவர் மொய் புண்ணீர் நீத்தம் ஓடி' (3063) என இப்பொருள்
வெளிப்பட வரும். நாள் கொண்டது - குறிப்பிட்ட நல்ல நாளில்
நற்செயலைத் தொடங்குதல். கட்டியங்காரனுடன் பின்னர்ச் செய்யும்
போருக்கு முதலே நாட் கொண்டது என்பது 'தான் செய்யும் தொழில்
நிகழ்த்துவதற்கு முன்பே தொடங்கி வைத்தலை 'என நச்சினார்க்கினியர்
உரை (சிந்தா. 448) இதனை மேலும் விளக்கும். தாடகையை இராமன் கொன்ற
போது 'அரக்கற்கு அந்நாள் முந்தி உற்பாதம் ஆக, படியிடை அற்று வீழ்ந்த
வெற்றி அம் பதாகை ஒத்தாள் (390) என்பதும் காண்க. காப்பிய
நிகழ்ச்சிகளை இவ்வாறு இயைத்துச் சுவைபட மொழிவது காப்பிய மரபாம்.
மலை துமித்தென வந்தது உவமையணி.                            96