2828. அதிர, மா நிலத்து, அடி
     பதைத்து அரற்றிய அரக்கி-
கதிர் கொள் கால வேல் கரன் முதல்
     நிருதர், வெங் கதப் போர்
எதிர் இலாதவர், இறுதியின்
     நிமித்தமா எழுந்து, ஆண்டு,
உதிர மாரி பெய் கார் நிற மேகம்
     ஒத்து,-உயர்ந்தாள்.

    அதிர மா நிலத்து அடி பதைத்து அரற்றிய அரக்கி - அதிர்ச்சி
உண்டாக, பெரிய தரையில் தன் நோவினால் பாதங்களைப் பதைப்புடன்
வைத்துக் கதறிய இராகக்கதச் சூர்ப்பணகை; கால கதிர் கொள் வேல்
கரன் முதல் நிருதர் -
யமன் போன்ற ஒளி மிக்க வேற்படையையுடைய
கரன் முதலாக உள்ள அரக்கர்களாகிய; வெங்கதப் போர் எதிர்
இலாதவர்-
கொடிய சினமிக்க போரில் தமக்கு எதிர் இல்லாதவர்களுடைய;
இறுதியின் நிமித்தமா - சாவின் பொருட்டு; எழுந்து ஆண்டு உதிரமாரி
பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் -
எழுந்து அங்கு இரத்த
மழையைப் பொழியும் கரிய நிற மேகத்தைப் போன்றவளாகி நிமிர்ந்து
நின்றாள்.

     பதைத்தல் - உதறுதலுமாம். யமன் எப்படி உயிர்களைப்
பற்றுவதிலிருந்து தவறானோ அவ்வாறே கரனின் வேலும் பகைவரைக்
கொல்வதிலிருந்து பிழையாது. கரன் முதலிய அரக்கரின் முடிவை
முன்கூட்டியே அறிவிக்கும் தீய குறியாய் இரத்த மழை பெய்யும் மேகத்தைப்
போல அவ்வரக்கர் வாழும் இடம் நோக்கிச் சூர்ப்பணகை எழுந்தாள்.
அவள் உருவம் கரிய மேகத்திற்கும் அவள் உடலிலிருந்து ஒழுகிய இரத்தப்
பெருக்கு இரத்த மழைக்கும் உவமையாம். மேகம் இரத்த மழை பெய்தல்
தீய சகுனமாம். ' குருதி மாமழை சொரிந்தன மேகங்கள்' (2944) எனக் கரன்
வதைப் படலத்தில் அகம்பன் கண்ட தீக்குறியாக இது விளங்கும்.
வான்மீகத்திலும் 'இரத்தம் பெருகி ஓட மழைக் காலத்தில் மேகங்கள்
கர்ஜிப்பது போல் கோரமாக அலறினாள் என்று வருவதை ஒப்பிடலாம் (5.11)
இது தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.                            97