2829.உயரும் விண்ணிடை; மண்ணிடை
     விழும்; கிடந்து உழைக்கும்;
அயரும்; கை குலைத்து அலமரும்;
     ஆர் உயிர் சோரும்;
பெயரும்; 'பெண் பிறந்தேன் பட்ட
     பிழை' எனப் பிதற்றும்;-
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத்
     தொல் குடிப் பிறந்தாள்.

    துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத் தொல்குடிப் பிறந்தாள் -
துன்பம் என்பது பயந்து இதற்கு முன் எப்போதும் அணுகாத பழைய
அரக்கர் குடியில் பிறந்த சூர்ப்பணகை; விண்ணிடை உயரும் - (துன்பம்
தாங்காமல்) வானில் உயர்ந்து எழுவாள்; மன்ணிடை விழும் - தரை மீது
விழுவாள்; கிடந்து உழைக்கும் - தரையில் வீழ்ந்தபடியே கிடந்து மிக
வருந்துவாள்; அயரும் - தளர்ச்சி உறுவாள்; கை குலைந்து அலமரும் -
கைகளைப் பிசைந்து மனம் சுழல்வாள்; ஆர் உயிர் சோரும் - அரிய
உயிர் சோர்ந்து மூர்ச்சை அடைவாள்; பெயரும் - பின் மூர்ச்சை தெளிந்து
எழுந்து செல்வாள்; வெண் பிறந்தேன் பட்ட பிழை எனப் பிதற்றும் -
பெண் பிறவியாய்ப் பிறந்து நான் பட்ட துன்பம் இது எனப் பிதற்றுவாள்.

     பிரமனை முதல்வனாகக் கொண்ட பழைய குடி சூர்ப்பணகை பிறந்த
குடியாம். எனவே 'தொல் குடி' எனப்பட்டது. இது வரை துன்பம் அக்
குடியைத் தொடர அஞ்சியது என்று கூறும் போது சூர்ப்பணகையின்
இச்செயலால் இனி மேல் துன்பம் அக்குடியைத் தொடரப் போகிறது என்பது
புலனாம். 'உளைக்கும்' எனப் பாடம் கொண்டு ஊளையிடுவாள் எனப்
பொருள் கூறுவர். மேலும் இதற்கு வருந்துதல் எனவும் உரைப்பர்.
உறுப்பிழந்த பெண் எவ்வாறு துன்பப்படுவாள் என்பதை மிக விளக்கமாக
பல்வேறு வினை அடுக்குகளால் இப்பாடல் காட்டும். பெண் பிறவி என்பதே
துன்பத்திற்குரியது என அரக்கர் குலப்பெண்ணும் எண்ணுவது
கருதற்குரியது. துயர் அஞ்சுதல் என்பது மரபு வழுவமைதி.            98