2830. | ஒற்றும் மூக்கினை; உலை உறு தீ என உயிர்க்கும்; எற்றும் கையினை, நிலத்தினில்; இணைத் தடங் கொங்கை பற்றும்; பார்க்கும்; மெய் வெயர்க்கும்; தன் பரு வலிக்காலால் சுற்றும்; ஓடும்; போய், சோரி நீர் சொரிதரச் சோரும். |
(சூர்ப்பணகை) மூக்கினை ஒற்றும் - இரத்தம் வழியும் மூக்கை ஆடையால் ஒற்றிக் கொள்வாள்; உலை உறு தீ என உயிர்க்கும் - கொல்லன் உலைக் களத்தில் எழும் தீச்சுடர் போன்று பெருமூச்சு விடுவாள்; கையினை நிலத்தினில் எற்றும் - கைகளை தரை மீது ஓங்கி அடிப்பாள்; இணைத் தடங் கொங்கை பற்றும் பார்க்கும் - தன் இரு பெரிய முலைகளைக் கைகளால் பற்றிப் பார்ப்பாள்; மெய் வெயர்க்கும் - உடல் வேர்ப்பாள்; தன் பருவலிக் காலால் சுற்றும் ஓடும் - தனது பெரிய வலிமை படைத்த கால்களால் சுற்றி ஓடி வருவாள்; போய்(ச்) சோரி நீர் சொரிதரச் சோரும் - ஓடிப் போய் இரத்தம் பொழியத் தளர்வாள். ஒற்றுதல் மேலும் இரத்தம் பெருகாமலிருப்பதற்காம். உலை உறு தீயைப் பற்றி - உலைமுகப் புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே (527) எனவும் 'கொல்லன் ஊது உலையில் கனல் என்ன வெய்து உயிர்த்தான் (1506) எனவும் வருதல் கொண்டு நன்குணரலாம். சுற்றும் ஓடும் எனத் தனித் தனியாகவும் பொருள் காண்பர். 99 |