2831. ஊற்றும் மிக்க நீர் அருவியின்
     ஒழுகிய குருதிச்
சேற்று வெள்ளத்துள் திரிபவள்,
     தேவரும் இரிய,
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர்
     பெயர் எலாம் கூறி,
ஆற்றுகிற்கிலள்; பற்பல பன்னி
     நின்று, அழைத்தாள்.

    ஊற்றும் மிக்க நீர் அருவியின் - பொழிகின்ற மிகுந்த நீருள்ள
அருவி போல; ஒழுகிய குருதிச் சேற்று வெள்ளத்துள் திரிபவள் -
வழிந்தோடும் இரத்தச் சேறாம் நீர்ப் பெருக்கில் அலைபவளாம்
சூர்ப்பணகை; ஆற்று கிற்கிலள் - தன்னால் பொறுக்க முடியாதவளாய்;
தேவரும் இரிய - அவள் அலறலைக் கேட்டுத் தேவர்களும் நிலை
குலைந்து ஓட; கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம்
கூறி-
யமனும் அஞ்சும் தன் குலத்தில் பிறந்த அரக்கர் பெயர்களை
எல்லாம்எடுத்துக் கூறி; பற்பல பன்னி நின்று அழைத்தாள் - பல
பலவாறுவிளக்கமாகக் கூறி நின்று கூப்பிட்டாள்.

     ஊற்றும் - இடைவிடாது பொழியும், தேவரும் அவள் குரல் கேட்டு
அஞ்சி ஓடினர்; யமனும் அது கேட்டு மனம் துணுக்குற்றான் என்பதால்
அவளது குரலின் ஆற்றல் புலனாம். பன்னுதல் - மீண்டும் மீண்டும்
கூறுதல், பெருவெள்ளமாய் இரத்தம் பெருகியதால் அவள் நின்ற இடம்
சேறாயிற்று.

     தேவரும், கூற்றும் - என்பனவற்றில் உள்ள உம்மைகள் உயர்வு
சிறப்பின.                                                   100