உறவினரைக் கூவி அழைத்தல் கலி விருத்தம் 2832. | 'நிலை எடுத்து, நெடு நிலத்து நீ இருக்க, தாபதர்கள் சிலை எடுத்துத் திரியும்இது சிறிது அன்றோ? தேவர் எதிர் தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! தழல் எடுத்தான் மலை எடுத்த தனி மலையே! இவை காண வாராயோ? |
தழல் எடுத்தான் மலை எடுத்த தனி மலையே - தீயைக் கையில் ஏந்திய சிவனின் கயிலை மலையைக் கையால் எடுத்த ஒப்பற்ற மலை போன்ற அண்ணாவே!; நீ நெடுநிலத்து நிலை எடுத்து இருக்க - நீ இந்தப் பெரிய உலகில் நிலை பெற்ற புகழால் விளங்கி நிற்கும் போது; தாபதர்கள் சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ - தவம் புரிவோர் வில்லேந்தி நடமாடுவது உன் புகழுக்கு இழுக்கல்லவா?; (அன்றியும்) தேவர் எதிர் தலை எடுத்து விழியாமைச் சமைப்பதே - தேவர்கள் முன்னே தலை நிமிர்ந்து பார்க்காமல் வெட்கி நிற்பதும் ஆகக்கூடியதோ?; இவை காணவாராயோ - (எனக்கு நேர்ந்த இச் சிறுமைகளை) நீ பார்க்க வரமாட்டாயா? தாபதர் - இராமலக்குவர். தவவேடம் பூண்டு வனத்தில் இருந்த நிலையை இது சுட்டும் 'இவை காண' என்பது தன் உறுப்புகள் அறுப்புண்டு துன்புறும் நிலையைக் காண எனவும் பொருள்படும். சமைத்தல் - அமைத்தல். சிவன் கையில் அனலேந்தியது - தாருக வன முனிவர்கள் சிவனை அழிக்க ஏவிய தீயினைச் சிவன் தன் கையில் ஏந்திய செயலைக் குறிக்கும். மலை இராவணனுக்கு உவம ஆகுபெயர். 101 |