2833."புலிதானே புறத்து ஆக, குட்டி
     கோட்படாது" என்ன,
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை
     பொய்யோ? ஊழியினும்
சலி யாத மூவர்க்கும்,
     தானவர்க்கும், வானவர்க்கும்,
வலியானே! யான் பட்ட வலி
     காண வாராயோ?

    ஊழியினும் சலியாத மூவர்க்கும் தானவர்க்கும் வானவர்க்கும்
வலியானே -
கற்ப முடிவிலும் ஆற்றல் தளராத மும் மூர்த்திகளுக்கும்
அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் மிக்க வலிமை கொண்ட இராவணனே;
புலி தானே புறத்து ஆக(க்) குட்டி கோட்படாது - தாய்ப் புலியானது
பக்கத்திலிருக்க அதன் குட்டி எவராலும் பிடிக்கப்பட்டுத் துன்புறாது; என்ன
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ -
என்று முழக்கத்துடன்
கூடிய கடல் சூழ்ந்த உலக மக்கள் கூறும் பழமொழி பொய்யோ?;
யான்பட்ட வலி காண வாராயோ - நான் அடைந்த கொடும் துன்பத்தைப்
பார்க்க வரமாட்டாயா?

     புலிதானே புறத்தது ஆகக்குட்டி கோட்படாது என்ற பழமொழியைப்
புறநானூற்றில் உள்ள 'புலி புறங்காக்கும் குருளை போல' (புறம். 42.10) என்ற
அடியோடு ஒப்பிடத்தக்கது. 'குட்டியைத் தின்னலாமே கோட்புலி புறத்ததாக'
எனவரும் சிந்தாமணி (1134) அடியும் இதனை விளக்கும் 'வலியானே! யான்
பட்ட வலி காணவாராய்' என்பதில் உள்ள சொல் பின்வரு நயம் எண்ணி
மகிழ்தற்குரியது. தானவர் என்பவர்கள் தனு என்பவளுக்குக் காசிபரிடம்
பிறந்த அசுரர் என்பர்.

     உலகு - இடவாகுபெயர். இதில் பிறிது மொழிதல் அணி உளது. உலக
உண்மை மொழி தன்னிலையால் பொய்த்து விட்டதே எனச் சூர்ப்பணகை
கூறியது குறிப்புமொழியாம்.                                     102