2834.'ஆர்த்து, ஆணைக்கு-அரசு உந்தி, அமரர்
     கணத்தொடும் அடர்ந்த
போர்த் தானை இந்திரனைப் பொருது,
     அவனைப் போர் தொலைத்து,
வேர்த்தானை, உயிர் கொண்டு
     மீண்டானை, வெரிந் பண்டு
பார்த்தானே! யான் பட்ட
     பழி வந்து பாராயோ?

    ஆர்த்து ஆணைக்கு அரசு உந்தி அமரர் கணத்தொடும்
அடர்ந்த போர்த்தானை இந்திரனைப் பொருது -
ஆரவாரம் செய்து
யானைகளுக்கு அரசனான ஐராவதத்தைச் செலுத்தித் தேவர் கூட்டத்துடனே
நெருங்கிய போர்ப் படையோடு கூடிய இந்திரனை எதிர்த்துப் போர் புரிந்து;
அவனைப் போர் தொலைத்து வேர்த் தானை உயிர் கொண்டு
மீண்டானை -
அவனைப் போரிலே அழியச் செய்து அச்சத்தால் உடல்
வியர்த்துத் தப்பி உயிர் கொண்டு ஓடிப்போனவனை; பண்டு வெரிந்
பார்த்தானே -
முன்பு முதுகிட்டோடப் பார்த்த இராவணனே; யான்பட்ட
பழி வந்து பாராயோ -
நான் இங்கு அடைந்த இழிவை நீ வந்து பார்க்க
மாட்டாயோ?.

     ஆனைக்கு அரசு - இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் எனும்
வெள்ளை யானையே. வெரிந் - புறமுதுகு.

     இப்பாடலுக்கு வேறு வகையில் பொருள் காண்பதும் உண்டு.
தேவேந்திரனை வென்ற இந்திரசித்தே! பெருவலிமை படைத்த நீ எனக்கு
நேர்ந்த இப்பழியைப் பார்த்து இதற்கு மாற்றம் செய்யமாட்டாயா? என்று
சூர்ப்பணகை கதறினாள் என்பர்.

     இராவணன் திக்கு விசயம் செய்து யாவரையும் வென்ற போது
விண்ணுலகு சென்று அங்கும் இந்திரனுடன் போர் புரிந்தான். அவன் தேவர்
படையோடு ஐராவத யானை மீதேறி இராவணனும் வியக்கப் போர்
புரிந்தான். அப்போது இராவணன் மகன் மேகநாதன் மாயை புரிந்து போர்
செய்த போது இந்திரன் புறமுதுகிட்டோட அவனை மாயைப் பாசத்தால்
பிணித்துச் சிறையில் அடைத்தான். அப்போது பிரமன் முதலான தேவர்கள்
வந்து அவனுக்கு 'இந்திரசித்' என்ற பட்டமும் வரமுமளித்து இந்திரனை
மீட்டதாகப் புராண வரலாறு கூறும்.

     முன் பின் பாடல்களில் இராவணனை விளிப்பதால் இதுவும்
இராவணனை அழைத்ததாகவே கொள்வது பொருத்தம்.              103