2835. | 'காற்றினையும், புனலினையும், கனலினையும், கடுங் காலக் கூற்றினையும், விண்ணினையும், கோளினையும், பணி கொண்டற்கு ஆற்றினை நீ; ஈண்டு, இருவர் மானுடவர்க்கு ஆற்றாது மாற்றினையோ, உன் வலத்தை? சிவன் தடக்கை வாள் கொண்டாய்! |
சிவன் தடக்கை வாள் கொண்டாய் - சிவபிரான் தம் பெருமை பொருந்திய கையை நீட்டி அளித்த சந்திர காசம் எனும் வாளைப் பெற்றுக் கொண்ட இராவணனே!; காற்றினையும் - வாயு தேவனையும்; புனலினையும் - நீர்க்கடவுளாம் வருணனையும்; கனலினையும் - அக்கினி தேவனையும்; கடும் காலக் கூற்றினையும் - கொடிய கால தேவனாம் யமனையும்; விண்ணினையும் - வானத்தையும்; கோளினையும் - நவக் கிரகங்களையும்; பணி கொண்டற்கு - ஏவல் கொள்வதற்கு; ஆற்றினை - வேண்டுவன செய்வித்தாய்; நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது - அத்தகைய ஆற்றல் கொண்ட நீ இங்கு இரு மனிதர்க்கு எதிரிடும் வலிமையற்று; உன் வலத்தை மாற்றினையோ - உன் வலிமையை மாற்றிக் கொண்டாயோ? காற்று, நீர், தீ, காலம், விண், கோள் ஆகியவற்றினை அடக்கிய ஆற்றல் பெற்றவன் இராவணன். அத்தகையோன் இரு மனிதர் ஆற்றலை அடக்க மாட்டானா எனக் கூவி அழைக்கிறாள் சூர்ப்பணகை. இரு மானிடவர் - இராமனும் இலக்குவனும். சிவன் தடக்கை வாள் பெற்றமை: இராவணன் சிவன் வீற்றிருந்த கயிலாய மலையைப் பெயர்த்தெடுத்த போது அவர் தம் திருவடிப் பெருவிரலால் அழுத்த இராவணன் நசுக்குண்டு கதறினான். பின் சாம வேதம் பாடிடச் சிவன் மனமிரங்கி அவனை விடுவித்து 'இராவணன்' என்ற பெயரையும் நீண்ட வாழ் நாளையும், சந்திரகாசம் எனும் வாளையும் அளித்தார். 104 |