2836.'உருப் பொடியா மன்மதனை
     ஒத்துளரே ஆயினும், உன்
செருப்பு அடியின் பொடி ஒவ்வா
     மானிடரைச் சீறுதியோ?
நெருப்பு அடியில் பொடி சிதற, நிறைந்த
     மதத் திசை யானை
மருப்பு ஒடிய, பொருப்பு இடிய,
     தோள் நிமிர்த்த வலியோனே!

    அடியில் நெருப்பு(ப்)பொடி சிதற - (கால்களைப் பதிய வைத்து
நடக்கும்போது) அக்கால்களால் எழுப்பப்படும் துகள் நெருப்புப் பொறி
சிந்தவும்; நிறைந்த மதத் திசை யானை மருப்பு ஒடிய - மிகுந்த மதநீர்
பொழியும் திக்கு யானைகளின் கொம்புகள் ஒடியவும்; பொருப்பு இடிய -
மலைகள் இடிந்திடவும்; தோள் நிமிர்த்த வலியோனே - இருபது
தோள்களையும் நிமிர்த்துப் போர் புரிந்த வலிமை கொண்ட இராவணனே!;
உருப் பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும் - சிவன் கோபத்தால்
உருவம் நீறாக்கப் பெற்ற மன்மதனைப் போன்று உள்ளவர்களே ஆனாலும்;
உன் செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரைச் சீறுதியோ -
உன்னுடைய செருப்பின் கீழே உள்ள துகளுக்கு ஒப்பாகாத மனிதர்களை நீ
கோபிப்பாயோ? (கோபிக்க மாட்டாய்).

     உருப்பு ஒடியா மன்மதன் எனவும் பொருள் கூறுவர். உருப்பு ஒடியா-
கொடுமை செய்வதில் குறையாத என்பது அதன் பொருள். நெருப்பு ஒடிய
எனப் பாடம் கொண்டு அக்கினி தேவன் தோல்வியுற்று எனப் பொருள்
கூறுவர்.

     இராமலக்குவரைச் 'செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடர்' எனக்
கூறலாமா எனக் கேட்டவர்க்குக் கம்பரின் மகன் அம்பிகாபதி கவியுளம்
காணும் வகையைக் கூற, நாதமுனிகள் இதனைக் கவிக் கூற்றாகக்
கொள்ளாமல் இராமலக்குவரால் ஏமாற்றமும் உறுப்புக் குறையுமடைந்த
சூர்ப்பணகை அவர்களிடத்துக் கொண்ட வெறுப்பால் இவ்வாறு கூறினாள்
என்பர். மேலும் செரு+படி எனக் கொண்டு யுத்த பூமியில் ஒரு துகளுக்கு
ஒப்பாகாத மானுடர் என்று கொள்ளவும் இடமுளது. எனவே இது கவித்திறன்
அன்றி அபசாரமன்று என அவர் அருளினார் என்பது கதை. (விநோதரச
மந்திரி வீராசாமி செட்டியார், பதிப்பு டி.ர. பாலகிருஷ்ணண், சென்னை 1969
ப. 192).                                                     105