2837. | 'தேனுடைய நறுந் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல் தான் உடைய இராவணற்கும், தம்பி யர்க்கும், தவிர்ந்ததோ? ஊனுடைய உடம்பினர் ஆய், எம் குலத்தோர்க்கு உணவு ஆய மானுடவர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி? அம்மா! |
தேனுடைய நறுந் தெரியல் தேவரையும் - தேனைக் கொண்ட நறுமணமிக்க கற்பகப்பூ மாலை அணிந்த தேவர்களையும்; தெறும் ஆற்றல் தான் உடைய இராவணற்கும் தம்பியர்க்கும் தவிர்ந்ததோ - அழிக்கின்ற வல்லமையை உடைய இராவணனுக்கும் அவன் தம்பிமார்க்கும் (இப்போது அவ்வலிமை) நீங்கி விட்டதோ?; ஊன் உடைய உடம்பின ராய் - தசையும் உதிரமுமுள்ள உடம்பை உடையவர்களாய்; எம் குலத்தோர்க்கு உணவு ஆய - எமது அரக்க குலத்தார்க்கு இரையாக உள்ள; மானுடவர் மருங்கே புக்கு வலி ஒடுங்கினதோ - மனிதரிடத்துச் சென்று அடங்கியதோ?; அம்மா - இது வியப்பிற்குரியது; தம்பியர் - இராவணனின் தம்பிமார்களாகிய கும்பகர்ணன், கரன் முதலியோர். வீடணன் இவர்கள் செயலுக்கு உடன் செல்லான். ஆகையால் அவனை இவள் நினைக்கவில்லை எனலாம். ஊனுடைய உடம்பினர் என்றதால் மானுடர் அரக்கர்க்கு உணவாகும் தகுதியுடையவரன்றி வேறு சிறப்பில்லை என்பது குறிப்பு. உண்பாராகிய அரக்கர்க்கு உண்ணப் படுபவராகிய மானிடர் வலிமை பெற்றவர் ஆய்விட்டாரே என வியப்பு எழுந்ததாம். அம்மா என்ற சொல் இதனைக் குறிக்கும். தேவரையும் - உயர்வு சிறப்பும்மை. 106 |