2838. | 'மரன் ஏயும் நெடுங் கானில் மறைந்து உறையும் தாபதர்கள் உரனேயோ? அடல் அரக்கர் ஓய்வேயோ? உற்று எதிர்ந்தார், "அரனேயோ? அரியேயோ? அயனேயோ?" எனும் ஆற்றல் கரனேயோ! யான் பட்ட கையறவு காணாயோ? |
மரன் ஏயும் நெடுங்கானில் - மரங்கள் அடர்ந்த இப்பெரிய காட்டில்; மறைந்து உறையும் தாபதர்கள் உரனேயோ - அரக்கர்க்கு அஞ்சி ஒளிந்து வாழும் தவம் புரிவோர் வலிமையைக் குறிப்பதோ?; (அல்லது) அடல் அரக்கர் ஓய்வேயோ - வலிமை மிக்க இராக்கதர்களின் வலிமை ஓய்ந்து போனதைக் குறிப்பதோ? (எது என அறியேன்); உற்று எதிர்ந்தார் - எதிர்ப்பட்டுப் போர் புரிந்தார்; அரனேயோ - சிவனோ?; அரியேயோ - திருமாலோ?; அயனேயோ - பிரம்மாவோ?; எனும் ஆற்றல் கரனேயோ - என்று கருதும் வலிமை பொருந்திய கரனே!; யான் பட்ட கையறவு காணாயோ - நான் அடைந்த துன்பத்தை நீ பார்க்க மாட்டாயா? இராவணனை உதவிக்கழைத்த சூர்ப்பணகை கரனைக் கூவி அழைக்கிறாள். கரன் இராவணனுக்குத் தம்பி முறையாவான். இராவணனின் தந்தையாம் விசுரவசு முனிக்கும் இராவணன் தாயாம் கேகசியின் தங்கையாம் கும்பீநசிக்கும் பிறந்தவன். தண்டகாரணியத்தில் சூர்ப்பணகைக்கென உண்டாக்கிய அரசில் அவள் பாதுகாப்புக்கென அமைத்த அரக்கர் சேனையின் முதல் தலைவனாவான். தம் பகைவரை அழிக்கும் வலிமை படைத்த சிவன், திருமால், பிரம்மா போன்று வலிமை படைத்தவன் கரன். மனிதரால் தான்பட்ட துன்பத்தை அண்மையிலுள்ள கரன் கேட்டு உதவி செய்ய வாரானோ எனக் கூவினாள். காட்டில் வாழும் தவசியர் வலிமைக்கு நகரங்களில் வாழும் அரக்கர் வலிமை குன்றியதோ என அவள் ஐயுற்றாள். காமக் கடவுளும் கையற்றேங்க (சிலம்பு 15.102) எனவரும். மன்னனினா குலம் மயங்கிற்றெனவே (சிந்தா. 2629) என்ற அடிக்கு நச்சினார்க்கினியர் சீவகனைப் போலே கையறவிலே மயங்கிற் றென்க' என்று உரைத்தார். கையறவு என்ற சொற் பொருள் இவற்றால் நன்கு விளங்கும். 107 |