2839. | 'இந்திரனும், மலர் அயனும், இமையவரும், பணி கேட்ப, சுந்தரி பல்லாண்டு இசைப்ப, உலகு ஏழும் தொழுது ஏத்த, சந்திரன்போல் தனிக் குடைக்கீழ் நீ இருக்கும் சவை நடுவே வந்து, அடியேன் நாணாது, முகம் காட்ட வல்லேனோ? |
இந்திரனும் மலர் அயனும் இமையவரும் பணிகேட்ப - தேவேந்திரனும் தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் பிரம்மாவும் தேவர்களும் நீ இட்ட கட்டளைகளைக் கேட்டுக் குற்றேவல் செய்ய; சுந்தரி பல்லாண்டு இசைப்ப - இந்திராணி 'பல்லாண்டு' எனும் வாழ்த்துப் பாடலைப் பாட; உலகு ஏழும் தொழுது ஏத்த - ஏழு உலகங்களில் உள்ளவர்கள் வணங்கிப் புகழ; சந்திரன் போல் தனிக் குடைக்கீழ் நீ இருக்கும் சவை நடுவே - முழுமதி போன்ற ஒப்பற்ற வெண்கொற்றக் குடையின் கீழே நீ கொலு வீற்றிருக்கும் சபையின் நடுவில்; அடியேன் வந்து நாணாது முகம் காட்ட வல்லேனோ - அடியாளாகிய நான் வந்து வெட்கமின்றி (மூக்கும் காதும் அறுபட்ட) என் முகத்தைக் காட்டும் தகுதி உடையேனோ? (ஆகேன் என்றவாறு); சுந்தரி - தேவமங்கையர் எனவும் கூறுவர் 'பொன்னகர் மடந்தையர், விஞ்சையர் பூவையர், பன்னக வனிதையர், இயக்கர் பாவையர், முன்னின பணி முறை மாறி முந்துவார் (4883) என ஊர்தேடு படலத்தில் வந்த செய்யுள் இதற்கு மேலும் விளக்கம் தரும். பல்லாண்டு - பல ஆண்டுக் காலம் வாழ வாழ்த்துதல் பெரியாழ்வார் பாடிய 'திருப்பல்லாண்டு' நினைத்தற்குரியது. (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியாழ்வார், திருப்பல்லாண்டு 1-12) உலகேழு - கீழேழு மேலேழு உலகங்களைக் குறிக்கும். அடியேன் - தங்கை நிலையைக் குறிக்கும். இப்பாடல் இராவணன் கொலு மண்டபச் சிறப்பும் அங்கு உறுப்பறைகள் செல்லல் கூடாது என்பதையும் சுட்டும். 108 |