2840.'உரன் நெரிந்து விழ, என்னை உதைத்து,
     உருட்டி, மூக்கு அரிந்த
நரன் இருந்து தோள் பார்க்க,
     நான் கிடந்து புலம்புவதோ?
கரன் இருந்த வனம் அன்றோ?
     இவை படவும் கடவேனோ?-
அரன் இருந்த மலை எடுத்த
     அண்ணாவோ! அண்ணாவோ!!

    அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ -
சிவன் வீற்றிருக்கும் கயிலாய மலையைப் பேர்த்தெடுத்த அண்ணனே!
அண்ணனே!!; உரன் நெரிந்து விழ - மார்பு சிதைந்து கீழே விழும்படி;
என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த நரன் இருந்து தோள்பார்க்க
-
என்னைக் காலால் உதைத்து உருண்டு விழச் செய்து என் மூக்கை
அரிந்த மனிதன் தன் தோளைப் பார்த்துப் பெருமிதம் கொள்ள; நான்
கிடந்து புலம்புவதோ -
நான் ஆதரவு இன்றித் தனியே இருந்து அழுவது
தகுதியோ?; கரன் இருந்த வனம் அன்றோ - இது கரன் ஆட்சி
செலுத்தியிருக்கும் காடு அல்லவா?; இவை படவும் கடவேனோ -
(இக்காட்டிலே) நான் இக்கேடு அடையத் தகுவேனோ?

     சூர்ப்பணகையை இலக்குவன் உதைத்து உருட்டி மூக்கரிந்ததை முன்
வந்த பாடல்கள் கூறும் (2824-25). தோள் பார்த்தல் - வீரச் செயல்
புரிந்தவர்கள் தம் தோள்களைச் செருக்குடன் பார்த்து மகிழ்தல்.
இப்பொருள் வெளிப்பட 'எள்ளுநர்கள் சாயவென தோளிரண்டும் நோக்கி'
(சிந்தா. 847) 'கோவனும் மக்களும் குளிர்ந்து தோணோக்கினர்' (சிந்தா.
1843) என்ற தொடர்கள் உள்ளன.

     கரன் இருந்த வனம் என்பது சூர்ப்பணகைக்கு உறு துணையாக
இராவணனால் கரன் அமர்த்தப் பெற்ற வனம் என ஆம்.

     'அண்ணாவோ அண்ணாவோ' என இரட்டித்து வந்தது போல்
பின்னரும் 'இராவணவோ! இராவணவோ!!' (2841) எனவும் 'மருகாவோ!
மருகாவோ!!' (2842) எனவும் வருதல் காணலாம்.                   109