2842. | 'கானம் அதினிடை, இருவர், காதொடு மூக்கு உடன் அரிய, மானமதால், பாவியேன், இவண் மடியக் கடவேனோ?- தானவரைக் கரு அறுத்து, சதமகனைத் தளை இட்டு, வானவரைப் பணி கொண்ட மருகாவோ! மருகாவோ!! |
தான வரைக் கரு அறுத்து - வித்தியாதரர்களைக் குலத்தோடு அழித்து; சதமகனைத் தளையிட்டு - நூறு அசுவமேத யாகம் செய்த இந்திரனைப் போரில் வென்று சிறைப்படுத்தி; வானவரைப் பணி கொண்ட மருகாவோ மருகாவோ - தேவர்களை ஏவல் கொண்ட மருமகனாம் இந்திரசித்தே! இந்திரசித்தே!!; கானம் அதனிடை இருவர் காதொடு மூக்கு உடன் அரிய - இக்காட்டிலே இரு மனிதர் என்னுடைய காதுகளையும் மூக்கையும் ஒரு சேர அறுத்து விட; பாவியேன் மானமதால் இவண் மடியக் கடவேனோ - பாவம் செய்த நான் அவமானத்தால் இங்குக் கிடந்து சாவதற்கு உரியவள் ஆவனோ; தானவர் என்பதற்கு அசுரர்கள் எனப் பொருள் கூறுவர். ஆயின், சிந்தாமணியில் (535) தப்பில் வாய் மொழித் தானவர் வைகிய' என்ற அடியிலுள்ள 'தானவர்' என்பதற்கு வித்தியாதரர் என்ற அடிக்குறிப்பு மேருமந்தர புராணத்தில் (சஞ்சயந்தன். 6) உள்ள பாடலில் 'சாம மார்ந் திலங்கு மேனித் தானவனொருவன்' என வரும் அடிக்கேற்பப் பொருள் கொள்ளப்படும். அது போன்றே இங்கும் வித்தியாதரர் எனவே பொருள் கொள்வது பின்வரும் 'சதமகனைத் தளையிட்டு' என்பதனோடு இயையும். அசுரர் பலரை அழித்ததாகப் பொருள் கூறுவோர் உத்தரராமாயணத்திலிருந்து இந்திரசித்து அசுரரை அழித்ததற்குச் சான்று பொருள் கூறுவோரும் உளர் மானம் - அவமானம். இப்பொருளில் 'மானந் தலை வருவ செய்பவோ' என நாலடியாரிலும் (198) ஆளப் பெறும். இதுவும் அடுத்த பாடலும் இராவணன் மகன் இந்திரசித்துவை நோக்கிக் கூறியவை. 111 |