2843. | 'ஒரு காலத்து, உலகு ஏழும் உருத்து எதிர, தனு ஒன்றால், திருகாத சினம் திருகி, திசை அனைத்தும் செல நூறி, இரு காலில், புரந்தரனை இருந்த தளையில் இடுவித்த மருகாவோ! மானிடவர் வலி காண வாராயோ? |
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர - முன்னொரு காலத்தில் ஏழு உலகங்களும் சினந்து எதிர் வந்து போர் செய்ய; தனு ஒன்றால் திருகாத சினம் திருகி - தன் ஒரு வில்லால் தணியாக் கோபம் முதிர்ந்து; திசை அனைத்தும் செல நூறி - எல்லாத் திக்குகளிலும் அஞ்சி ஓடிச் செல்ல அழித்து; புரந்தரனை இருகாலில் இருந்தளையில் இடுவித்த - இந்திரனின் இரண்டு கால்களிலும் வலிய விலங்குகளிட்டுப் பிணித்த; மருகாவோ - மருமகனாம் இந்திரசித்தே!; மானிடவர் வலி காண வாராயோ - இந்த மனிதர்களின் வலிமையைக் காண வரமாட்டாயா? முன்பு இராவணன் ஏழுலகங்களையும் வென்ற போது அவனுக்குத் துணையாக அவன் மகன் இந்திரசித்துவும் சென்று போரிட்டுப் பலரையும் வென்ற நிகழ்ச்சியைச் சூர்ப்பணகை நினைத்து இவ்வாறு கூறுகின்றாள். ஏழுலகங்களையும் இந்திரசித்து தன் ஒரு வில்லாலேயே வென்றமையால் அவன் வலிமை நன்கு புலப்படும். அத்தகையோன் மானிடவர் வலிமை காண்பது மட்டுமின்றி அவர் வில்லாற்றலையும் வீழ்த்துவான் என்பது குறிப்பு. 'இருஞ் சிறையிலிட வைத்த' எனப் பாடம் கூறி இந்திரனைப் பெரிய சிறையிலடைத்தமையைக் கூறுவர். இந்திரன் இவனிடம் பல முறை தோற்றான் என்பதை யுத்த காண்ட நாகபாசப் படலத்தில் காணலாம். 112 |