இராமன் வர, அவனிடம் முறையிடுதல் 2845. | என்று, இன்ன பல பன்னி, இகல் அரக்கி அழுது இரங்கி, பொன் துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து, நின்று, அந்த நதியகத்து, நிறை தவத்தின் குறை முடித்து, வன்திண்கைச் சிலை நெடுந்தோள் மரகதத்தின் மலை வந்தான். |
என்று இன்ன பல பன்னி - என இவ்வாறு பலவற்றைச் சொல்லி; இகல் அரக்கி அழுது இரங்கி - வலிய அந்தச் சூர்ப்பணகை புலம்பி வருந்தி; பொன் துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து - அழகு மிக்க (அத்தவச்சாலையின்) நிலத்திடத்துப் புரண்டழும் காலத்து; வன் திண்கைச் சிலை நெடுந்தோள் மரகதத்தின் மலை - மிகவலிய கையில் வில்லை ஏந்தி நெடுந் தோளுடைய மரகதம் போன்ற மலை எனும்படி உள்ள இராமன்; அந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து நின்று வந்தான் - அக்கோதாவரி ஆற்றின் துறையில் விதி முறைப்படி செய்யும் நாட்கடன்களைச் செய்து முடித்து அங்கிருந்து தவச்சாலை நோக்கி வந்தான். பன்னுதல் - பலமுறை வருந்திக் கூறுதல். முன்னரும் 'தன் குலத்தினோர் பெயரெலாங் கூறி ஆற்றுகிற்கிலள்; பற்பல பன்னி நின்று அழைத்தாள்' (2831) என வரும். பொன் - அழகு. 'பொன் புனைந்த கழலடியோன்' (பு. வெ. மாலை 7.2. கொளு) என்று இப்பொருளில் பயன்பட்டுள்ளது. பொழுது - இங்குக் காலையைக் குறிக்கும். இராமனுக்கு மரகதமலை இக்காப்பியத்தில் பல இடங்களில் 'மரகதப் பெருங்கல்' (532) 'பொரு அரு மரகதப் பொலன் கொள் மால்வரை' (5273) எனக் குறிக்கப் பெறும். இராமன் கடன்களாற்றுவதால் தவத்தின் குறை தீர்ந்தது எனவும் கூறுவர். 114 |