2846. | 'வந்தானை முகம் நோக்கி, வயிறு அலைத்து, மழைக் கண்ணீர், செந் தாரைக் குருதியொடு செழு நிலத்தைச் சேறு ஆக்கி, அந்தோ! உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் எந்தாய்! யான் பட்டபடி இது காண்' என்று, எதிர் விழுந்தாள். |
வந்தானை - அங்கு வந்த இராமனை; முகம் நோக்கி வயிறு அலைத்து - அவன் முகத்தை (சூர்ப்பணகை) பார்த்துத் தன் வயிற்றில் அடித்துக் கொண்டு; மழைக் கண்ணீர் செந்தாரைக் குருதியொடு செழுநிலத்தைச் சேறு ஆக்கி - மழை போல் கண்ணீராலும் தொடர்ந்து ஒழுகும் சிவந்த இரத்தத்தாலும் செழுமையான அந்த மண்ணைச் சேறாகக் கொண்டு; எந்தாய் அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் - என் தலைவனே! ஐயோ! உன் அழகிய வடிவின் மீது ஆசை கொண்ட கொடிய குற்றத்தால்; யான்பட்டபடி இது காண் என்று எதிர் விழுந்தாள் - நான் அடைந்த இக்கேட்டைப் பார் என இராமன் முன் வீழ்ந்தாள். முகம் நோக்கல் - இரக்கம் வேண்டி ஒருவர் முகத்தைப் பார்த்தல். வயிறு அலைத்தல் - மகளிர் தங்களுக்குத் துன்பம் வந்தபோது கைகளால் வயிற்றில் அடித்துக் கொள்ளல். இதனைச் சுட்டும் வகையில் 'எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட' (25) என வந்துள்ளது. பொதுவாக வன்பு இழைத்தவர்கள் தான் துன்புறுவர். ஆனால் இராமனிடத்துத் தான் அன்பு கொண்ட காரணத்தால் உறுப்பிழந்த அவலத்தை அவனிடம் கூறி அவன் தன் மீது ஆசை கொள்ள வைக்கலாம் எனச் சூர்ப்பணகை கெஞ்சுகிறாள். 'அன்பிழைத்த வன் பிழை' என்ற தொடரில் காணும் முரண், உலகியலுக்கு எதிராக நடை பெற்ற கொடுமையை இராமன் உணர வேண்டும் என்ற உட்கருத்தும் வெளிப்படும். தன் சொல்லாலும் எதிர் விழுந்த செயலாலும் இராமன் உளத்தை ஈர்க்கவே சூர்ப்பணகை முயலும் பாங்கு அவலக் காட்சியாக இதில் வெளிப்படுகிறது. 115 |