2847. | விரிந்து ஆய கூந்தலாள், வெய்ய வினை யாதானும் புரிந்தாள் என்பது, தனது பொரு அரிய திருமனத்தால் தெரிந்தான்; இன்று, இளையானே இவளை நெடுஞ் செவியொடு மூக்கு அரிந்தான் என்பதும் உணர்ந்தான்; அவளை, 'நீயார்?' என்றான். |
விரிந்து ஆய கூந்தலாள் - விரிந்துள்ள கூந்தலை உடைய அவள்; வெய்ய வினை யாதானும் புரிந்தாள் என்பது - கொடிய செயல் ஏதேனும் செய்தாள் என்பதை; தனது பொரு அரிய திருமனத்தால் தெரிந்தான் - (இராமன்) தன் ஒப்பற்ற சிறந்த உள்ளத்தால் அறிந்தாள்; இன்று இளையானே இவளை - இப்போது தன் தம்பி யாம் இலக்குவனே இவளை; நெடுஞ் செவியொடு மூக்கு அரிந்தான் என்பதும் உணர்ந்தான் - நீண்ட காதுடன் மூக்கையும் அறுத்தான் என்பதையும் அறிந்தான்; (அதன்பின்) அவளை நீ யார் என்றான் - சூர்ப்பணகையைப் பார்த்து, நீ யார்? எனக் கேட்டான். விரிந்த கூந்தல், சூர்ப்பணகையின் அவல நிலையைக் காட்டுகிறது. வெய்ய வினை - பிறர்க்குத் தீங்கு செய்யும் கொடிய செயல். இராமன் எதையும் பிழையின்றி உணரும் மனம் பெற்றவன் என்பதைப் 'பொரு அரிய திருமனம்' என்பது காட்டும் - அந்த அரக்கிக்கு இத்தகைய செயல் செய்திருப்பவன் இலக்குவன் என்றும் அவள் பிறர்க்கு யாதேனும் தீமை செய்ய விருந்ததைத் தடுக்கவே இலக்குவன் இச் செயல் செய்திருப்பான் என்றும் எண்ணிய இராமனின் உள்ளம் நன்கு தன் தம்பியர் மீது கொண்ட நம்பிக்கையைப் புலப்படுத்துகிறது. எனினும் புதியதாகச் சூர்ப்பணகையைக் காண்பவன் போன்று நீ யார்?' எனக் கேட்டான். காமவல்லி உருவம் மாறியிருந்ததால் இவ்வாறு கேட்டான் எனலுமாம். 116 |