2848. அவ் உரை கேட்டு, அடல் அரக்கி,
     'அறியாயோ நீ, என்னை?
தெவ் உரை என்று ஓர் உலகும்
     இல்லாத சீற்றத்தான்;
வெவ் இலை வேல் இராவணனாம்,
     விண் உலகம் முதல் ஆக
எவ் உலகும் உடையானுக்கு
     உடன்பிறந்தேன் யான்' என்றாள்.

    அவ்வுரை கேட்டு அடல் அரக்கி - (இராமனின்)
அவ்வார்த்தையைக் கேட்டு; என்னை நீ அறியாயோ - நீ முன்பே
என்னை அறிய மாட்டாயோ?; தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத
சீற்றத்தான் -
பகைமைப் பேச்சு என்று கூறும் சொல்லை உலகம் ஒன்றிலும்
இல்லாதபடி செய்த கோபமுடையவனான; வெவ் இலை வேல்
இராவணனாம் விண் உலகம் முதல் ஆக எவ் உலகும் உடையானுக்கு
-
கொடிய இலை போல்வடித்த வேலை உடைய இராவணன் எனும்
சுவர்க்கலோகம் முதல் எந்த உலகத்தையும் தன்னாட்சிக் கீழ்
உடையவனுக்கு; உடன்பிறந்தேன் யான் என்றாள் - கூடப் பிறந்த தங்கை
நான் எனக் கூறினாள் சூர்ப்பணகை.

     இராமன் 'வெய்ய வினை யாதானும் புரிந்தாள்' என
எண்ணியதற்கேற்ப (2847) 'அடல் அரக்கி' எனப்பட்டாள். 'நேற்று வந்த
என்னை நீ அறியாயோ? என்ற குறிப்பு அவள் கேள்வியில் தொனிக்கிறது.
'எனக்குத் தீங்கு செய்தவர் பகையை உலகெங்கும் பகைச் சொல்லே
இல்லாது' ஆண்ட இராவணன் அழிப்பான் என அச்சுறுத்துகிறாள்.
இராவணனிடம் பல படைகளிருப்பினும் வேற்படை சிறப்பாகக் கூறப்பட்டது.
இது யுத்த காண்டத்தில் நன்கு வெளிப்படும்.                       117