2849. | 'தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழிய, தவம் இயற்ற யாம் இருந்த நெடுஞ் சூழற்கு என் செய வந்தீர்?' எனலும், "வேம் இருந்தில் எனக் கனலும் வெங்காம வெம் பிணிக்கு மா மருந்தே! நெருநலினும் வந்திலெனோ யான்?" என்றாள். |
தகை அரக்கர் தாம் இருந்த புகல் ஒழிய - பெருமை பெற்ற இராக்கதர் இருந்த இடம் நீங்க, (அவ்விடம் விட்டு); தவம் இயற்ற யாம் இருந்த நெடுஞ்சூழற்கு என் செய வந்தீர் எனலும் - நாங்கள் தவம் செய்ய வந்த இத்தூரத்தில் உள்ள இடத்திற்கு எச் செயல் செய்ய வந்தீர் என இராமன் கேட்கவும்; வேம் இருந்தில் எனக் கனலும் வெங்காம வெம் பிணிக்கு மாமருந்தே - நெருப்பில் எரியும் கரிபோல் வாட்டும் கொடிய காமமாம் கொடு நோய்க்குரிய சிறந்த மருந்து போன்றவனே!; யான் நெருநலினும் வந்திலெனோ என்றாள் - நான் நேற்றும் வரவில்லையா எனக் கேட்டாள் சூர்ப்பணகை. பகைவராயினும் அவர்தம் வலிமை புலப்படத் 'தகை அரக்கர்' என்றார் இராமன் காட்டுக்குத் தவம் செய்ய வந்த குறிப்பு. அயோத்தியா காண்டத்தில் கைகேயி கூறும் மொழியில் 'ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய், தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந்தவம் மேற் கொண்டு (1601) என வரும். இருந்தில் - கரி. காமத்தை வெங்காமம் என்றும் அதனையே வெம் பிணி என்றும் கூறியது அதன் கொடுமை சுட்டி நின்றது. காமத்தைத் தீர்க்க இராமன் மருந்து எனக் கூறியதில் அவன் சூர்ப்பணகையை மணக்க வேண்டும் என்பதே வெளிப்படைப் பொருள்; எனினும் இராமன் காமத்தை நீக்கும் மாமருந்து என உயர் பொருளையும் குறிப்பாகக் காட்டும். 118 |