2850.' "செங் கயல்போல் கரு நெடுங் கண்,
     தே மரு தாமரை உறையும்
நங்கை இவர்" என நெருநல்
     நடந்தவரோ நாம்?' என்ன,
'கொங்கைகளும், குழைக்காதும், கொடிமூக்கும்,
     குறைத்து அழித்தால்,
அம் கண் அரசே! ஒருவர்க்கு அழியாதோ
     அழகு?' என்றாள்.

    செங்கயல் போல் கரு நெடுங் கண் - சிவந்த கயல் மீன் போன்று
பிறழும் கரிய நீண்ட கண்களையுடைய; தே மரு தாமரை உறையும்
நங்கை இவர் -
தேன் பொருந்திய தாமரை மலரில் தங்கிய திருமகளே
இவர்; என நெருநல் நடந்தவரோ நாம் என்ன - என்று கூறும்படி நேற்று
வந்தவர் நீரோ என (இராமன்) கேட்க; கொங்கைகளும் குழைக்காதும்
கொடி மூக்கும் குறைந்து அழித்தால் -
மார்பகங்களும் குழைகளை
அணிந்த காதுகளும் கொடி போல் உயர்ந்து நீண்ட மூக்கும் குறைபடுமாறு
அறுத்தால்; அம்கண் அரசே! - அழகிய கண்களை உடைய அழகின்
அரசே!; ஒருவர்க்கு அழகு அழியாதோ என்றாள் - எப்படிப்பட்ட
ஒருவர்க்கும் அழகு அழியாதோ எனக் கேட்டாள் சூர்ப்பணகை.

     கயல் மீன் - மகளிர் கண்ணுக்கு உவமை. இலக்குவன்
சூர்ப்பணகையின் 'மூக்கும் காதும்வெம் முரண் முலைக் கண்களும்
முறையால் போக்கி'யதைக் (2825) கண்டோம். அச் செயலைக் கூறி
அவ்வாறு அங்கங் குறைபட்ட பெண்ணிடம் அழகு எவ்வாறு இருக்கும் என
இராமனை நோக்கிச் சூர்ப்பணகை கேட்டாள். அப்போதும் அவனுடைய
கண் அத்தகைய கொடுமையைப் பாராது இராது எனக் கூறும் வகையில்
'அம் கண் அரசே' என்றாள். 'நாம்' என இராமன் இங்குக் குறித்ததை
'முன்னிலை உளப்பாட்டுத் தன்மையில் உயர்வு தோன்ற முன்னிலை வந்தது'
எனத் திருக்கோவையார் இரவுக் குறியில் தளர்வகன்றுரைத்தல் பற்றிய
கூற்றில் காணும் 'பையவே நாம் அரையாமத்து என்னோ வந்து வைகி
நயந்ததுவே' (164) என்ற தொடரில் 'நாம்' என்ற சொற்குப் பேராசிரியர்
கூறும் உரையுடன் ஒப்பிடத்தக்கது.                              119