2852.'தேட்டம்தான் வாள் எயிற்றில்
     தின்னவோ? தீவினையோர்
கூட்டம்தான் புறத்து உளதோ? குறித்த
     பொருள் உணர்ந்திலனால்;
நாட்டம்தான் எரி உமிழ,
     நல்லாள்மேல் பொல்லாதாள்
ஓட்டந்தாள்; அரிதின் இவள் உடன்று
     எழுந்தாள்' என உரைத்தான்.

    வாள் எயிற்றில் தின்ன(த்) தேட்டம் தானோ - கூரிய பற்களால்
தின்னுதற்குத் தேடுதலாலேயோ; தீவினையோர் கூட்டம் தான் புறத்து
உளதோ -
கொடுஞ் செயல் புரிகின்ற அரக்கர் கூட்டம் பின்னே
இருந்ததோ?; குறித்த பொருள் உணர்ந்திலன் - (இவள்) செய்யக் கருதிய
காரணத்தை அளிந்தேனில்லை; பொல்லாதாள் நாட்டம் தான் எரி உமிழ
-
தீமை புரியும் இவளுடைய கண்கள் தீயைக் கக்க; அரிதின் உடன்று
இவள் எழுந்தாள் -
பிறர்க்கு உணர இயலா வகையில் கோபித்து இவள்
புறப்பட்டாள்; நல்லாள் மேல் ஓட்டந்தாள் என உரைத்தான் -
நற்பண்புள்ள சீதையை நோக்கி ஓடி வந்தாள் என்று சொன்னான்; ஆல் -
அசை.

     தேட்டம் - தேடுதல், நாட்டம் - கண், பொருள் - காரணம்.
இலக்குவனுக்குச் சூர்ப்பணகை செய்த செயலின் காரணம் தெரியவில்லை.
சீதையைக் கைப்பற்றித் தின்னுதற்குத் தான் மட்டும் வந்தாளா அன்றித் தன்
அரக்கர் கூட்டத்துடன் வந்தாளா எனத் தெரியவில்லை. 'தம்பி இருண்ட
சோலையில் இருந்தது காணாள்' (2822) என்று முன்னர் வந்துளது கொண்டு
அச்சோலைக்குப் புறத்தே அரக்கர் இருக்கலாம் என இலக்குவன்
எண்ணினான்.

     முதல் மூன்று அடிகளில் வரும் 'தான்' எனும் மூன்று சொற்களும்
தேற்றப் பொருளில் வந்த இடைச் சொற்கள் 'நல்லாள் மேல் வந்த
பொல்லாதாள்' - முரண் அணி. ஓட்டந்தாள் - ஓட்டம் தந்தாள் என்பதன்
விகாரம். அயோத்தியா காண்ட நகர் நீங்கு படலத்தில் தயரதன் தன் சாப
வரலாறு கூறும் போது 'வீட்டுண்டு அலறும் குரலாம் வேழக்குரல் அன்று
எனவே ஓட்டந்து எதிரா' (1686) என இப்பொருளில் வந்துளது. சூர்ப்பணகை
தன்மேல் வரக் கண்ட சீதை உயிரிழந்தவள் போல் தளர்ந்து கிடந்து பின்
தன்னுயிரை மீண்டும் பெற்றாள் எனவும் பொருள் உரைப்பர்.         121