சூர்ப்பணகை இடை மறித்து உரைத்தல்

2853. ஏற்ற வளை வரி சிலையோன்
     இயம்பாமுன், இகல் அரக்கி,
'சேற்ற வளை தன் கணவன்
     அருகு இருப்ப, சினம் திருகி,
சூல் தவளை, நீர் உழக்கும் துறை
     கெழு நீர் வள நாட!
மாற்றவளைக் கண்டக்கால்
     அழலாதோ மனம்?' என்றாள்.

    ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பாமுன் - வளைந்த
கட்டமைந்த வில்லுடைய இலக்குவன் இவ்வாறு சொல்லி முடிக்குமுன்; இகல்
அரக்கி -
பகைமை கொண்ட அரக்கியாம் சூர்ப்பணகை; சூல் தவளை
தன் கணவன் அருகு சேற்றவளை இருப்ப -
கருவுற்ற பெண் தவளை
தன் கணவனாம் ஆண் தவளை அருகே சேற்றில் ஒரு சங்கு தங்கியிருக்க;
சினம் திருகி நீர் உழக்கும் துறை கெழு நீர்வள நாட! - கோப முதிர
ஊடல் கொண்டு நீரைக் கலக்கும் நீர்த்துறை பொருந்திய நீர் நிலைகளால்
வளம் பெற்ற நாட்டையுடையவனே!; மாற்றவளைக் கண்டக்கால் மனம்
அழலாதோ என்றாள் -
தன் கணவனின் மற்றொரு மனைவியைக்
கண்டால் மனம் எரியாதோ எனக் கேட்டாள்.

     ஏற்ற வரிசிலையோன் - மேலும் சூர்ப்பணகை தீச் செயல் புரிய
நினைத்தால் அவள் மேல் அம்பு எய்யப் பூட்டிய வில்லுடைய இலக்குவன்
எனலுமாம். சூல்தவளை சங்கோடு சினக்கும் என நாட்டு வளம் கூறும்போது
அஃறிணை உயிர்களே தன் கணவன் அருகே பிற பெண்ணிருக்கச்
சினக்கும் போது, தான் விரும்பும் இராமன் அருகே மாற்றாளாய் ஒருத்தி
நிற்கக் கண்டு சினவாமல் இருக்க இயலுமா எனக் குறித்துக் கேட்கிறாள்
சூர்ப்பணகை.

     இந்நாட்டு வள வரிகளைச் சங்கப் பாடலில் காணும் 'புழற் காலாம்
பலகலடை நீழற் கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுகயேற்றை நாகின வளையொடு
பகன் மணம் புகூஉம் நீர்திகழ் கழனிநாடு' (புறம் 266-3-6) வரிகளுடன்
ஒப்பிடலாம்.                                                  122