2855. | 'நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர் கரை இறந்தோர், இராவணற்குக் கரம் இறுக்கும் குடி என்றால், விரையும் இது நன்று அன்று; வேறு ஆக யான் உரைக்கும் உரை உளது, நுமக்கு உறுதி உணர்வு உளதேல்' என்று உரைப்பாள்: |
நரை திரை என்று இல்லாத - மயிர் நரைத்தலும் தோல் சுருங்குதலும் ஆகிய கிழத்தன்மை என்பதில்லாத; நான்முகனே முதல் அமரர் கரை இறந்தோர் - பிரம்மா முதலான தேவர்களில் எல்லையற்ற அளவுள்ளவர்கள்; இராவணற்குக் கரம் இறுக்கும் குடி என்றால் - என் அண்ணனாம் இராவணனுக்கு இறை செலுத்தி அவன் ஆட்சிக்குட்பட்ட குடிமக்கள் என்று சொன்னால்; விரையும் இது நன்று அன்று - இப்போது அவசரப் பட்டுச் செய்யும் செயல் நல்லது ஆகாது; நுமக்கு உறுதி உணர்வு உளதேல் - உங்களுக்கு உயிர் வாழும் உறுதியான அறிவு இருக்குமானால்; வேறு ஆக யான் உரைக்கும் உரை உளது என்று உரைப்பாள் - தனிப்பட நான் கூறும் சொல் உள்ளது எனக் கூறுவாள். நரை திரை இல்லாத என்று கூறியதால் மூப்பும் அதன் வழி வரும் சாவும் இல்லை எனக் கொள்ளப் பெறும். நான்முகன் முதலான தேவர்கள் எப்போதும் அழியா இளமை பூண்டவர்கள் என்பது புராண மரபு. கரம் - கப்பம், திறைப் பொருள் குடி இறை எனவுமாம். பெருங்கதையுள் (1.32.61-62) கணக்கரை வியன் கரக் கலவறை காக்கும் திணைத் தொழிலாளரைப் புகுத்துமின் ஈங்கென' வரும். 'விரையும் இது' என்றது 'ஓடிப்போ' என (2854) எனக் கூறியதாம். 'உறுதி உணர்வு உளதேல் என்னுரை கேளுங்கள்' என்ற நயப்பு நிலை இதில் புலனாம். 124 |