2856.'"ஆக்க அரிய மூக்கு, உங்கை
     அரியுண்டாள்" என்றாரை
நாக்கு அரியும் தயமுகனார்;
     நாகரிகர் அல்லாமை,
மூக்கு அரிந்து, நும் குலத்தை
     முதல் அரிந்தீர்; இனி, உமக்குப்
போக்கு அரிது; இவ் அழகை எல்லாம்
     புல்லிடையே உகுத்தீரே!'

    உங்கை ஆக்கரிய மூக்கு அரியுண்டாள் - "உன் தங்கை
(சூர்ப்பணகை) படைப்பதற்கருமையான மூக்கு அறுபட்டாள்", என்றாரை
நாக்கு அரியும் தயமுகனார் -
நாக்கை அறுக்கும் பத்துத் தலையுடைய
இராவணனார், நாகரிகர் அல்லாமை - கண்ணோட்டம் உடையவர்
அல்லாமையால், மூக்கு அரிந்து - என் மூக்கை அறுத்து; நும் குலத்தை
முதல் அரிந்தீர் -
உம் குலத்தின் வேரையே அறுத்தவர் ஆனீர்; இனி
உமக்குப் போக்கு அரிது -
இனிமேல் உமக்குத் தப்பிப் பிழைக்கும் வழி
இல்லை; இவ் அழகை எல்லாம் புல்லிடை உகுத்தீரே - இந்த
அழகையெல்லாம் புல் அடர்ந்த காட்டில் சிந்தினவர் ஆயினீரே!'; ஏ-அசை.

     மூக்கு என்றது அத்துடன் காதுகளையும் முலைகளையும் குறித்து
நின்றது. தயமுகனார் இராவணனின் பத்துத் தலை உடைமையைச்
சுட்டுகிறது. நாகரிகம் - கண்ணோட்டம். பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர்
நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (குறள். 580) என்ற ஆட்சியைக் காண்க.
நாகரிகத்து (பெருங். 1.35.214) எனப் பெருங்கதையிலும் இப்பொருளில்
வந்துளது. தங்கையின் மூக் கரிதல் கேட்டு இராவணன் இராமனின் குல
முதலை அரிதல் உறுதி எனச் சூர்ப்பணகை கூறுகிறாள்.

     இராமன் மறையின் அவன் அழகும் அழியுமே எனத் தன் காம
வேகத்தில் சூர்ப்பணகை புலம்புகிறாள். இனி, அழகின் பொருளாக இருந்த
தன் மூக்கை அரிந்து வீணாக்கி விட்டமையைச் சுட்டினாள் என்பர்.
புல்லிடை உகுத்தல் - வீணாக்கல் 'புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல்
எனக் கூனி கைகேயியிடம் கூறுவாள் (1468). பரதன் கோசலையிடம்
சூளுரை கூறியபோதும் 'ஆண் தொழில் புல்லிடை உகுத்தனென்' என்பான்.
(2214). தயமுகனார் - வடசொல் திரிபு. அரிந்தீர் - காலவழுவமைதி
இப்பாடலில் உடனிகழ்ச்சி அணி உளது.                          125