2857.'வான் காப்போர், மண் காப்போர்,
     மாநாகர் வாழ் உலகம்-
தான் காப்போர், இனி தங்கள் தலை
     காத்து நின்று, உங்கள்
ஊன் காக்க உரியார் யார்?
     என்னை, உயிர் நீர் காக்கின்,
யான் காப்பென்; அல்லால், அவ்
     இராவணனார் உளர்!' என்றாள்

    என்னை நீர் உயிர் காக்கின் - (என் ஆசையை நிறை வேற்றி) என்
உயிரை அழியாமல் நீர் காப்பீரானால்; யான் காப்பென் - நான் உங்களை
இராவணனாரிடமிருந்து காப்பேன்; அல்லால் இனி அவ் இராவணனார்
உளர் -
அல்லாவிடில் உம்மை அழிக்க என் அண்ணனாம் அந்த
இராவணனார் இருக்கிறார்; (அதனால்) வான் காப்போர் - மேலுலகைக்
காக்கும் தேவர்களிலும்; மண்காப்போர் - நிலவுலகைக் காக்கும்
அரசர்களிலும்; மாநாகர் வாழ் உலகம் காப்போர் - பெரிய நாகர்கள்
வாழும் உலகங்காப்போரிலும்; தங்கள் தலைகாத்து நின்று - தங்களுடைய
தலையை அறுபடாமல் காத்து; உங்கள் ஊன் காக்க உரியார் யார்
என்றாள் -
உங்களுடைய உடல்களைப் பாதுகாக்கத் தக்கவர் யார் என்று
கேட்டாள். (ஒருவருமில்லை, என்னைத் தவிர). தான் - அசை.

     மண்ணுலகு விண்ணுலகு மற்றெல்லா உலகுகள் ஆகியவற்றில்
உள்ளவர்கள் இராவணனுக்கு அடிப்பட்டவரே. அவர்களில் எவரும்
இராமனைக் காக்க இராவணனை எதிர்த்து வாரார். எனவே உங்களைக்
காக்க நான் ஒருத்தியே உளேன்' எனச் சூர்ப்பணகை கூறினாள்.

     ஊன் - உடல் 'ஊனைக் குறித்த உயிரெல்லாம்' (குறள். 1013) என
வருதல் காண்க.

     மாநகர் என்று பாடங் கொண்டு மாநகரங்களில் வாழும் உலகம்
காப்போர் என்றுங் கூறுவர்.                                    126