2858. | 'காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார்; ஆவல் பேர் அன்பினால், அறைகின்றேன் ஆம் அன்றோ? ' "தேவர்க்கும் வலியான்தன் திருத் தங்கையாள் இவள்; ஈண்டு ஏவர்க்கும் வலியாள்" என்று, இளையானுக்கு இயம்பீரோ? |
திண் காவல் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார் - வலிய காவலாகிய கற்பு நெறியில் பொருந்திய பெண்கள் தம் உயர்வைத் தாமே எடுத்துக் கூறமாட்டார்; ஆவல் பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம் அன்றோ - (அப்படியாயினும்) உம்மிடம் நான் கொண்ட ஆசையால் பெரிய அன்பு கொண்டு இதனைச் சொல்கின்றேன் அல்லவா?; தேவர்க்கும் வலியான் தன் திருத்தங்கையாள் இவள் - வானவர்க்கும் வலிமையுடைய இராவணனாரின் பெருமைமிக்க உடன் பிறந்தாள் இவள்; ஈண்டு ஏவர்க்கும் வலியாள் - இவ்வுலகில் எப்பேர்ப் பட்டவர்க்கும் வலிமையுடையவள்; என்று இளையானுக்கு இயம்பீரோ - என்று உம் தம்பியாம் இலக்குவனுக்குக் கூற மாட்டீர்களா? திண் கற்பு என்பதைக் கற்பென்னும் திண்மை (குறள். 54) என்பதுடன் ஒப்பிடுக. ஆவல் பேரன்பு - அளவு கடந்த பெரிய அன்பு. 'இளையான் என் வலி கருதாது என் உறுப்புகளை அறுத்துவிட்டான் எனினும் என் பேராற்றலையும் என் அண்ணனாம் இராவணனின் பேராற்றலையும் அவன் உணருமாறு கூறுக' என்றாள் சூர்ப்பணகை. இதில் சீதையைக் காட்டிலும் தன் பெருமை இருப்பதைக் கூறிக் கொண்டாள் எனலுமாம். ஆம் அன்றோ- தேற்றோகாரம். 127 |