2859. | 'மாப் போரில் புறங் காப்பேன்; வான் சுமந்து செல வல்லேன்; தூப் போல, கனி பலவும், சுவை உடைய, தர வல்லேன்; காப் போரைக் கைத்து என்? நீர் கருதியது தருவேன்; இப் பூப் போலும் மெல்லியலால் பொருள் என்னோ? புகல்வீரே. |
மாப் போரில் புறங்காப்பேன் - பெரிய சண்டையில் (உங்களைப்) பாதுகாப்பேன்; வான் சுமந்து செல வல்லேன் - ஆகாய வழியில் உங்களை நான் எடுத்துக் கொண்டு (நீங்கள் கூறிய இடத்திற்கு) செல்லத் திறமை உடையவள் ஆவேன்; தூப் போல - மாமிசம் போல, சுவை உடைய, கனி பலவும் தரவல்லேன் - நல்ல சுவை உடைய பழங்கள் பலவற்றையும் கொண்டு வந்து கொடுக்க வல்லவள் ஆவேன்; காப்போரைக் கைத்து என் - யார் காவல் செய்தாலும் அவர்களை வெறுத்து அழிக்க நீர் கருதியது ஏன்? நீர் கருதியது தருவேன் - நீங்கள் மனத்தால் விரும்பியதைக் கொண்டு வந்து கொடுப்பேன்; இப்பூப் போலும் மெல்லியலால் பொருள் என்னோ புகல்வீரே - இந்தப் பூவைப் போல் மெல்லிய பெண்ணால் பெறும் பயன் என்ன? சொல்வீர். புறங்காத்தல் - பகைவரால் வரும் தீமையை வாராமல் பாதுகாத்தல், வழிபடு தெய்வம் நிற் புறங் காக்க' எனத் தொல்காப்பியத் தொடர் இப் பொருளை வலியுறுத்தும் (தொல். பொருள். 422). வானில் சுமந்து செல்லல் சூர்ப்பணகையின் ஆற்றலை வெளிப்படுத்தும். தூ - ஊன் 'காப்போரைக் கைத் தென்னில் கருதியது தருவேன்' எனப் பாடம் கொண்டு யார் எப் பொருளைக் காவல் செய்திருந்தாலும் அவரை அழித்து நீர் விரும்பியதைக் கொண்டு தருவேன் எனப் பொருள் கூறுவர். பூப்போலும் மெல்லியல் எனச் சீதையைக் குறித்தற்குக் காரணம் அவளால் அவர்களைக் காப்பாற்றவோ, வேண்டிய பொருளைத் தரவோ இயலா நிலையைக் குறித்து இழித்தது. பொருள் - பயன். 'மெய்ப் பொருள் காண்பது அறிவு' (குறள். 423) இதனைக் குகப் படலத்தில் குகன் 'தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினென் கொணர்ந்தேன். என் கொல் திரு உளம்?' (1966) என்ற கூற்றுடன் ஒப்பிட்டு இவ் இருவரின் வேறுபட்ட நிலையை உணரலாம். 128 |