2860. | 'குலத்தாலும், நலத்தாலும், குறித்தனவே கொணர்தக்க வலத்தாலும், மதியாலும், வடிவாலும், மடத்தாலும், நிலத்தாரும், விசும்பாரும், நேரிழையார், என்னைப்போல் சொலத்தான் இங்கு உரியாரைச் சொல்லீரோ, வல்லீரேல்? |
குலத்தாலும் - பிறந்த உயர் குலச்சிறப்பாலும், நலத்தாலும் - நன்மை தரும் பண்பாலும், குறித்தனவே கொணர்தக்க வலத்தாலும் - நீங்கள் குறிப்பிட்ட பொருளைக் கொண்டு வந்து தரவல்ல ஆற்றலாலும், மதியாலும்- அறிவாலும், வடிவாலும் - உருவ அழகாலும், மடத்தாலும் - பெண்ணிற்குரிய மடமைப் பண்பாலும்; நிலத்தாரும் - மண்ணுலக மக்களும்; விசும்பாரும் - விண்ணுலகத் தேவரும்; என்னைப் போல் நேரிழையார்- என்னைப் போன்ற பெண்கள்; சொலத் தான் இங்கு உரியாரை வல்லீரேல் சொல்லீரோ - ஒப்பாகச் சொல்வதற்கு இங்கு உரிய பெண்களை நீங்கள் சொல்ல ஆற்றலுடையவர்களாயின் சொல்லுவீரோ? (சொல்ல முடியாது) தலை மக்களின் 'பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திரு என முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே, என்ற தொல்காப்பிய நூற்பா (தொல். பொருள். மெய்ப்பாட்டு. 25) இங்கு ஒப்பிடத்தக்கது. ஆயின் இது சூர்ப்பணகையின் தற்புகழ்ச்சி குறித்து உண்மைக்கு எதிராக முரண்பட அமைந்துளது. மடம் - மென்மை, 'தெளிநடை மடப்பிணை' (புறம். 23) என இப்பொருளில் வந்துளது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற பெண்களுக்குரிய நான்கு உயர் வான பண்புகளில் இஃதும் ஒன்றாம். மடம் - மேன்மை எனவும் உரைப்பர். 129 |