2861.'போக்கினீர் என் நாசி;
     போய்த்து என்? நீர் பொறுக்குவிரேல்,
ஆக்குவென் ஓர் நொடி வரையில்;
     அழகு அமைவென்; அருள்கூரும்
பாக்கியம் உண்டு எனின், அதனால்,
     பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ?
மேக்கு உயரும் நெடு மூக்கும்
     மடந்தையர்க்கு மிகை அன்றோ?

    என் நாசி போக்கினீர் - என்னுடைய மூக்கை அறுத்தீர்கள்,
போய்த்து என் - அதனால் போன இழப்பு என்ன? (எதுவுமில்லை), நீர்
பொறுக்குவிரேல் ஓர் நொடி வரையில் ஆக்குவென் -
நீர் என்னை
ஏற்றுக் கொண்டால் ஒரு நொடிப் பொழுதில் அம்மூக்கை உண்டாக்குவேன்;
அழகு அமைவென் - அழகும் நிரம்பப் பெறுவேன்; அருள்கூரும்
பாக்கியம் உண்டு எனின் -
உங்கள் கருணை மிகப் பெறும் பேறு
எனக்குக் கிட்டும் என்றால்; பெண்மைக்கு ஓர் பழுது அதனால்
உண்டோ -
என்னுடைய பெண் தன்மைக்கு ஒரு குற்றம் அதனால்
உண்டாகுமா?; மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை
அன்றோ -
பெரிதும் உயர்ந்துள்ள நீண்ட மூக்கும் பெண்களுக்கு அதிகம்
அல்லவா?.

     போய்த்து - போயிற்று. சூர்ப்பணகை தன் மூக்கை மீண்டும்
படைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டிருப்பினும் இராமன் விரும்பினால்
தன் மூக்கை மறுபடியும் ஆக்கிக் கொள்வதாகக் கூறுவதால் அவன் மீது
அவள் கொண்ட ஆசை நன்கு புலப்படுகிறது. தன் பெண்மைப் பண்பு
இராமனின் அருள் பெருக்கில் குற்றம் நீங்கி நிலை பெறும் என்பதையும்
எடுத்துரைக்கிறாள். அவள் சிந்தனை மற்றொரு பக்கம் செல்கிறது
மகளிர்க்கு உயர்ந்து நீண்ட மூக்கு மிகை என்று கருதித்தான் இலக்குவன்
அறுத்து விட்டானோ எனத்தான் எண்ணிய கருத்தை வெளிப்படுத்துகிறாள்.
மிகை - குற்றம் எனப் பழைய உரை கூறும்.                       130