2862.'விண்டாரே அல்லாரோ,
     வேண்டாதார்? மனம் வேண்டின்,
உண்டாய காதலின், என்
     உயிர் என்பது உமது அன்றோ?
கண்டாரே காதலிக்கும்
     கட்டழகும் விடம் அன்றோ?
கொண்டாரே கொண்டாடும்
     உருப் பெற்றால், கொள்ளீரோ?

    வேண்டாதார் விண்டாரே அல்லாரோ - மனம் விரும்பப் படாதவர்
மனம் வேறுபட்டவர் அல்லரோ?; மனம் வேண்டின் உண்டாய காதலின்
என் உயிர் என்பது உமது அன்றோ -
மனம் விரும்பினால் ஏற்பட்ட
ஆசையால் என் உயிரானது உம்முடையது அல்லவா?; கண்டாரே
காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ -
கண்டோர் எல்லோரும்
ஆசைப்படும் உடலழகும் (ஒரு பெண்ணுக்கு) நஞ்சு அல்லவா?;
கொண்டாரே கொண்டாடும் உருப் பெற்றால் கொள்ளீரோ - கணவர்
மேம்பட்டுரைக்கும் உருவை மட்டும் நான் அடைந்தால் நீங்கள் என்னை
ஏற்கமாட்டீரா? (ஏற்பீர்).

     'விண்டாரை அல்லாரோ வேண்டாதார் என்பதற்கு உலகில் தம்மை
விரும்பாதவரை ஒருவர் விரும்பினால் அவர்கள் பகைவர் அல்லரோ?
ஆதலால் இராமன் தன்னை விரும்பாத சீதையை ஆசைப் பட வேண்டாம்
என்பது பொருள். மன ஒற்றுமை இல்லாத நிலை பகைமை ஆகும். அது
ஏற்படின் ஒன்றிய உணர்வால் தம் உயிரையும் கொடுப்பர். மேலும்
பெண்களுக்கு மிக்க அழகு, நஞ்சு போன்றது. ஆனால் தன்னிடம் அவன்
விரும்பத்தக்க அழகு உள்ளது என்பது குறிப்பு. கட்டு+அழகு; யாக்கை,
எலும்பு, தசை, நரம்பு இவற்றால் கட்டப்பட்டது. எனவே கட்டு என்பது
உடம்பைச் சுட்டியதாம். கட்டழகு என்பது மிகுதியான அழகுமாம்.

     'கண்டாரே காதலிக்கும் கட்டழகு விட மன்றோ?' எனப் பொது
உண்மையைக் கூறிப் பேரழகு கொண்ட சீதை இராமனுக்குப் பெருந் துன்பம்
தருவாள் எனக் குறிப்பாக உணர்த்தினாள்.

     விண்டாரே, கண்டாரே, கொண்டாரே என்ற சொற்களில் காணும்
ஏகாரங்கள் தேற்றப் பொருளில் வந்தன. அல்லாரோ, அன்றோ,
கொள்ளீரோ என்ற சொற்களில் காணும் ஓகாரங்கள் வினாவாயினும்
உடன்பாட்டுப் பொருளில் வந்தன.                               131