2863. | 'சிவனும், மலர்த் திசைமுகனும்; திருமாலும், தெறு குலிசத்து- அவனும், அடுத்து ஒன்றாகி நின்றன்ன உருவோனே! புவனம் அனைத்தையும், ஒரு தன் பூங் கணையால் உயிர் வாங்கும் அவனும், உனக்கு இளையானோ? இவனேபோல் அருள் இலனால். |
சிவனும் - சிவபெருமானும், மலர்த்திசை முகனும் - தாமரை மலர் மீது இருக்கும் பிரமனும், திருமாலும் - மகாவிட்டுணுவும்; தெறு குலிசத்து அவனும் - பகைவரை அழிக்கும் வச்சிரப் படையுடைய இந்திரனும்; அடுத்து ஒன்றாகி நின்றன்ன உருவோனே - சேர்ந்து ஒன்றாகி நின்றது போன்ற அழகிய உருவம் உடையவனே!; புவனம் அனைத்தையும் ஒருதன் பூங்கணையால் உயிர் வாங்கும் அவனும் - உலகங்கள் எல்லாவற்றையும் ஒப்பற்ற தன் மலர் அம்புகளால் எல்லா உயிர்களையும் வருத்தும் அம் மன்மதனும்; இவனே போல் அருள் இலனால் உனக்கு இளையானோ - உன் தம்பி இலக்குவனைப் போல இரக்கமற்றவனாய் இருப்பதால் அவனும் உனக்குத் தம்பியோ? சிவன் அழிவுக்கும், பிரமன் படைப்பிற்கும், திருமால் காப்பிற்கும் உள்ளது போல் இராமன் முத்தொழிலும் ஒருங்கே செய்யும் முதல்வன் போல் விளங்குவதை இப்பாடல் சுட்டும். மன்மதன் பெண்களிடம் அன்பின்றி அவர்களைக் காம நோயால் துன்புறுத்துவது போன்று இலக்குவனும் தன் உறுப்புகளை அறுத்துத் துன்பம் செய்தான் என்பது சூர்ப்பணகை கொண்ட பொருளாம். மன்மதனின் ஐம் பூங் கணைகளில் நீல மலர் உயிரைக் கொல்லும் ஆற்றலுடையது. இராமனை விளித்து இலக்குவனின் குறையைக் கூறுகின்றாள் சூர்ப்பணகை. 'ஆக்கரியமூக்கு' எனத் தொடங்கும் பாடலிலிருந்து (2856) 'விண்டாரே' என்பது வரை (2862) பன்மையில் விளித்து இங்கு ஒருமையைப் பயன்படுத்தியுள்ளமை எண்ணுதற்குரியது. இவற்றுள் சில இருவரையும் சில இராமனையும் குறிப்பனவாக உள்ளன. ஓகாரம் வினா:ஏகாரம் பிரிநிலை. 132 |