அறுசீர் ஆசிரிய விருத்தம் 2864. | பொன் உருவப் பொரு கழலீர்! புழை காண, மூக்கு அரிவான் பொருள் வேறு உண்டோ? "இன் உருவம் இது கொண்டு, இங்கு இருந்து ஒழியும் நம் மருங்கே; ஏகாள் அப்பால்; பின், இவளை அயல் ஒருவர் பாரார்" என்றே, அரிந்தீர்; பிழை செய்தீரோ? அன்னதனை அறிந்து அன்றோ, அன்பு இரட்டி பூண்டது நான்? அறிவு இலேனோ? |
பொன் உருவப் பொருகழலீர் - பொன்னால் ஆக்கப்பட்ட அழகுள்ள வீரக்கழல் அணிந்தவரே!; புழைகாண மூக்கு அரிவான் பொருள் வேறு உண்டோ - பெருந்துளைப் படும்படி என மூக்கை அறுத்ததற்கு வேறு ஏதேனும் பொருள் உள்ளதா?; (எது வெனில்); இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து ஒழியும் நம்மருங்கு-(மூக்கறு படலுக்கு முன்னிருந்த) இனிய அழகிய வடிவம் இதைக் கொண்டு இவ்விடத்திலிருந்து சென்று விடுவாள் நம்மை விட்டு; அப்பால் ஏகாள் - மூக்கை இழந்த பிறகு வேற்றிடம் செல்லாள்; பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே - பின்னர் இப்பெண்ணை மற்றவர் எவரும் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டார் என்று; அரிந்தீர் - என் முக்கை அறுத்தீர்; பிழை செய்தீரோ - ஆதலால் நீங்கள் தவறு செய்தவர் ஆவீர்களோ (மாட்டீர்); அன்னதனை அறிந்து அன்றோ- அவ்வுண்மையை அறிந்து அல்லவா; அன்பு இரட்டி நான் பூண்டது - உங்களிடத்து இருமடங்கு அன்பு நான் கொண்டேன்; அறிவு இலேனோ - நான் இதை உணராத அறிவு இல்லாதவளா? (இல்லை). ஏ - அசை. மூக்கரிந்ததற்குரிய காரணத்தைச் சூர்ப்பணகை கூறும் முறை வியப்பிற் குரியது. அழகான இவள் நம்மை விட்டுப் பிறரிடம் போய்விடக் கூடாது என்ற உணர்வால் இலக்குவன் அரிந்ததும் அதை உணரும் அறிவைத் தான் பெற்றிருந்ததையும் கற்பித்துக் கூறும் போது அவள் திறன் எல்லை கடந்து செல்கிறது. கம்பரின் நாடகத்திறனுக்கு இது தக்க சான்றாம். 133 |