2865.'வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர்
     ஈது அறிந்து வெகுண்டு நோக்கின்,
அப் பழியால், உலகு அனைத்தும், நும் பொருட்டால்
     அழிந்தன ஆம்; அறத்தை நோக்கி,
ஒப்பழியச் செய்கிலார் உயர் குலத்துத்
     தோன்றினோர்; உணர்ந்து, நோக்கி,
இப் பழியைத் துடைத்து உதவி, இனிது இருத்திர்,
     என்னொடும்' என்று, இறைஞ்சி நின்றாள்.

    வெப்பு அழியா வெகுளி நெடுவேல் அரக்கர் - கொதிப்பு நீங்காத
சினமுடைய நீண்ட வேலை ஏந்திய இராக்கதர்கள்; ஈது அறிந்து
வெகுண்டு நோக்கின் -
(எனக்கு நீங்கள் செய்த) இக்கொடுமையை
அறிந்து சினந்து பார்த்தாரானால்; அப்பழியால் உலகு அனைத்தும் நும்
பொருட்டால் அழிந்தன ஆம் -
பழிவாங்கும் அச் செயலால் உலகங்கள்
எல்லாம் உம் கொடிய செயல் காரணமாக அழிந்து போனவை ஆகும்;
அறத்தை நோக்கி - தருமத்தை எண்ணி; உயர் குலத்துத் தோன்றினோர்
ஒப்பழியச் செய்கிலார் -
மேலான குலத்தில் பிறந்தோர் உலகம் ஏற்கும்
முறை கெடும் படியான செயலைச் செய்ய மாட்டார்கள்; (ஆதலால்)
உணர்ந்து நோக்கி இப்பழியைத் துடைத்து உதவி என்னொடும் இனிது
இருத்திர் -
இந்த பழிபடும் செயலை நீக்கி அருள் செய்து என்னுடன்
சேர்ந்து நன்கு வாழ்வீர்; என்று இறைஞ்சி நின்றாள் - என வணங்கி
நின்றாள் சூர்ப்பணகை.

     வெப்பு - கொடுமையுமாம். 'என் பொருட்டு உங்களுக்குக் கருணை
உண்டாகா விட்டாலும் உங்கள் செயலால் சினந்த அரக்கர் இவ்வுலகங்களை
அழிப்பது உறுதி. அதனை எண்ணி இரக்கம் பூண்டு என்னோடு வாழ்வீர்'
என வணங்கிய நிலையில் சூர்ப்பணகை கூறும் மொழிகளில் உயிரும்
உலகமும் அழிவதைச் சுட்டியும் அறம் காக்கும் கடமையை நினைவூட்டியும்
தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் தன்னலமே மேலோங்கித்
தெரிகிறது.                                                 134