2867.'தரை அளித்த தனி நேமித் தயரதன் தன்
     புதல்வர் யாம்; தாய்சொல் தாங்கி,
விரை அளித்த கான் புகுந்தேம்; வேதியரும்
     மா தவரும் வேண்ட, நீண்டு
கரை அளித்தற்கு அரிய படைக் கடல் அரக்கர்
     குலம் தொலைத்து, கண்டாய், பண்டை,
வரை அளித்த குல மாட, நகர் புகுவேம்;
     இவை தெரிய மனக்கொள்' என்றான்.

    யாம் - நாங்கள், தரை அளித்த தனி நேமித் தயரதன் தன்
புதல்வர் -
உலகை ஆண்ட ஒப்பற்ற ஆணைச் சக்கரத்தை உடைய தயரத
சக்கரவர்த்தியின் மக்கள்; தாய் சொல் தாங்கி - சிற்றன்னையாம்
கைகேயியின் ஆணைச் சொல்லை மேற்கொண்டு; விரை அளித்த கான்
புகுந்தேம் -
நறுமணம் வீசும் இக்காட்டை வந்தடைந்தோம்; வேதியரும்
மாதவரும் வேண்ட -
வேதம் ஓதுவோரும் பெருந்தவம் புரிவோரும்
விரும்பித் தெரிவித்தபடி; நீண்டு கரை அளித்தற்கு அரிய படைக் கடல்
அரக்கர் குலம் தொலைத்து -
பரந்து எல்லை காண முடியாத படைகளாம்
கடலை உடைய இராக்கதரின் குலத்தை வேரோடு ஒழித்து; பண்டை வரை
அளித்த குலமாட நகர்புகுவேம் -
ஊழிதோறும் நிலைத்துள்ள மலை
போன்ற சிறந்த மாளிகைகளை உடைய அயோத்தி நகரத்தில் சேர்வோம்;
இவை தெரிய மனக் கொள் - இவற்றை ஆராய்ந்து மனத்திலே
கொள்ளுக; கண்டாய் - நீ தெரிந்து கொள், என்றான் - என இராமன்
அறிவுறுத்தினான்.

     தந்தை பெருமை கூறித் தாயின் ஆணையைப் பின்கூறித் தன்
வாழ்வின் நோக்கை முன்னறிவுறுத்துகிறான். 'மணம் வீசும் காட்டில் இப்படி
மறச் செயல் செய்யும் நீ கடல் போல் அரக்கர் படையைக் கொண்டு
வரினும் அவர்கள் குலத்தை அழிப்பேன்' எனத் தன் வலி கூறினான்
இராமன். 'பண்டை வரை அளித்த குலமாட நகர்' என்பதுடன் நகரப்
படலத்தில் 'ஊழியின் இறுதி உறையுளோ' என்பது ஒப்பிடற்குரியது (94).
அளித்த - போன்ற. கண்டாய் என்பது முன்னிலை அசையுமாம். இராமனின்
அவதார நோக்கை இப்பாடல் குறிப்பாக உணர்த்துகிறது.             136