2868.' "நெறித் தாரை செல்லாத நிருதர் எதிர்
     நில்லாதே, நெடிய தேவர்
மறித்தார்; ஈண்டு, இவர் இருவர்; மானிடவர்"
     என்னாது, வல்லை ஆகின்,
வெறித் தாரை வேல் அரக்கர், விறல் இயக்கர்,
     முதலினர், நீ மிடலோர் என்று
குறித்தாரை யாவரையும், கொணருதியேல்,
     நின் எதிரே கோறும்' என்றான்.

    நெறித்தாரை சொல்லாத நிருதர் - நல்லொழுக்க வழியில் போகாத
அரக்கர்களுடைய; எதிர் நில்லாதே - எதிரில் நிற்காமல்; நெடிய தேவர்
மறித்தார் -
நீண்டகாலம் வாழ்ந்த தேவர்கள் தோற்று ஓடிப் போனார்கள்;
ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது - இங்குள்ள இவர் இருவரும்
மனிதர்கள் எனக் குறைவாகக் கருதாமல்; வல்லை ஆகின் - திறமை
உடையவள் ஆனால்; வெறித் தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர்
முதலினர் -
மணமிக்க மாலை அணிந்த வேற்படையை உடைய இராக்கதர்
வெற்றி பூண்ட இயட்சர்கள் முதலானவர்கள் - ஆகியோருள்; நீ மிடலோர்
என்று குறித்தாரை -
நீ வலிமையுடையோர் எனக் கருதியவர்கள்;
யாவரையும் கொணருதியேல் நின் எதிரே கோறும் - எல்லோரையும்
போரிட அழைத்து வந்தால் உன் முன்னே அவர்களைக் கொல்வோம்,
என்றான் - எனக் கூறினான் இராமன்.

     அரக்கர் வழி அல்லாத வழி என்பதைச் சுட்ட 'நெறித்தாரை
செல்லாத' என்றார். தேவரே தோற்கும் போது மனிதர் தாமே இவர் என
மதிக்கமாட்டாள் என்ற குறிப்பு இதில் புலப்படுகிறது. இயக்கரைச் சுட்டியது
குபேரன் இவள் தமயன் எனக் குறித்ததால். வெறி - என்பதற்கு புலால்
நாற்றம் எனலுமாம். வெறித்தார்+ஐ+வேல்+அரக்கர் எனப் பிரித்து
செருக்குற்றவரான அழகிய வேல் ஏந்திய இராக்கதர் எனவும் பொருள்
கூறலாம்.

     இராமனின் வீரவுரை சூர்ப்பணகையின் வீரர்குலப் பெருமைக்குரிய
விடையாகும்.                                                137